Published : 22 Oct 2020 11:36 AM
Last Updated : 22 Oct 2020 11:36 AM

கோவையில் உப்புநீர் விநியோகத்தில் குளறுபடி: எம்எல்ஏ கார்த்திக் கண்டனம்

கோவை

கோவையில் ஆழ்குழாய்க் கிணறு பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் சரியான முறையில் தங்களது பராமரிப்புப் பணிகளை செய்யாதபோதும் அவர்கள் மீது கோவை மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதிருப்பதற்கு, அவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் காரணம் என்று கோவை சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ.வான நா.கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சிறுவாணி பில்லூர் திட்டங்கள் மூலம் குடிதண்ணீர்,விநியோகம் செய்யப்படுகின்றன. குடிநீர் வாரம் ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை என முறை வைத்து விநியோகிக்கப்படுவதால், இதர உபயோகங்களுக்கு உப்பு நீர் விநியோகம் ஒவ்வொரு வார்டிலும் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உப்பு நீர் வழங்கும் ஆழ்குழாய்க் கிணறு பராமரிப்புப் பணிகள் செய்வதற்கு, கோவை மாநகராட்சியால் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் தொடர்ந்து ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கே வழங்கப்படுவதாக உள்ளூர் அரசியல்வாதிகள் மத்தியில் வெளிப்படையாகவே பேச்சு உள்ளது. அதாவது குறிப்பிட்ட பகுதி வார்டில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அல்லது ஆளுங்கட்சியின் வார்டு செயலாளர்களுக்கே வழங்கப்படுவதாக திமுக ஆட்சிக் காலத்தில் அதிமுகவும், அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுகவினரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளின் உப்புநீர்ப் பராமரிப்புப் பணியும் ஆளுங்கட்சியினர் வசமே உள்ளதாகவும், அவர்கள் மாநகராட்சியிடம் ஒப்பந்தப் பணியை எடுத்துக் கொண்டு, உப்பு நீர் விநியோகத்தை சரியாக செய்வதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்துக் கோவை சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்துக் கூறியதாவது.

''மாநகராட்சிப் பகுதிகளில், ஒரு வார்டில் 20 முதல் 40 வரையில் ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ளன. சராசரியாக ஒரு வார்டுக்கு, ஏறக்குறைய 25 ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ளன. இதில் ஒரு ஆழ்குழாய்க் கிணறு பராமரிப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 2,324.00 வீதம் கோவை மாநகராட்சியால், ஆழ்குழாய்க் கிணறு பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படுகிறது.

இதைக் கணக்கிட்டால் ஒரு வார்டுக்கு, ஒரு ஆண்டுக்குச் சராசரியாக சுமார் ஏழு லட்சம் ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுகிறது. இதன்படி , கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கணக்கிட்டால், ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் கோவை, மாநகராட்சியால் ஆழ்குழாய்க் கிணறு பராமரிப்பு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்தும், பல பகுதிகளில் உப்புநீர் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

பல இடங்களில் முறையான உப்பு நீர் விநியோகம் மற்றும் உடைப்பு ஏற்படும் உப்பு நீர்க் குழாய்களை உடனுக்குடன் சரிசெய்யாமல், ஆழ்குழாய்க் கிணறு பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் பெரும் குளறுபடிகளைச் செய்து வருகிறார்கள். இதனால் உப்பு நீர் விநியோகத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உப்புநீர்க் குழாய்கள் பழுதடைந்து பல நாட்கள், மாதங்கள் ஆனாலும், மேற்கண்ட ஒப்பந்ததாரர்களால் பழுது சரிசெய்யப்படுவதில்லை.

இதனால் பொதுமக்களுக்கு உப்பு நீர் விநியோகம் சரியான முறையில் கிடைக்காமல், அன்றாடப் பயன்பாட்டிற்குக் கூட நீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பொது மக்களுடைய அன்றாடப் பயன்பாட்டிற்கான உப்பு நீர் விநியோகத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனக்குறைவாக அலட்சியப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

இந்த உப்பு நீர்ப் பிரச்சினை தொடர்பாகப் பலமுறை மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர், உதவிப் பொறியாளர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசியும், கடிதங்கள் கொடுத்தும், பல இடங்களில் உப்பு நீர் விநியோகம் இதுவரை சீர் செய்யப்படவில்லை. பொதுமக்களுக்கு அன்றாடப் பயன்பாட்டிற்குக்கூட, பல இடங்களில் உப்பு நீர் கொடுக்க முடியாத அவல நிலையில் இந்த மாநகராட்சி உள்ளது.

ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உப்பு நீர் விநியோகத்தைச் சீரான முறையில், காலந்தாழ்த்தாமல் வழங்க வேண்டும். சரியான முறையில் தங்களது பராமரிப்புப் பணிகளைச் செய்யாத ஆழ்குழாய்க் கிணறு பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்''

இவ்வாறு எம்.எல்.ஏ நா.கார்த்திக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x