தி.நகரில் முகக்கவசம், கையுறை அணிந்து வந்து கைவரிசை; ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை: தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை

சென்னை, தி.நகர் மூசா தெருவில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வீடு.படம்: பு.க.பிரவீன்
சென்னை, தி.நகர் மூசா தெருவில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வீடு.படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை தியாகராய நகரில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து தப்பிய நபரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை, தியாகராய நகர், மூசா தெருவில், ராஜேந்திர குமார், தருண், பரிஸ் ஆகிய மூவரும் ‘உத்தம் நகை மாளிகை’ என்ற பெயரில், நகைக் கடை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் பிற நகைக் கடைகளுக்கு தேவையான நகை ஆர்டரை மொத்தமாகப் பெற்று அதை வேறு ஒரு நிறுவனத்தின் மூலம் செய்து சம்பந்தப்பட்ட நகைக்கடைக்கு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது, அதே பகுதியில் உள்ள இரண்டு தளம் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில், ஒரு பகுதியில் நகைகளை சேமித்து கடை போல் வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கடையின் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த ஒருவர் உள்ளே இருந்த 4.125 கிலோ தங்க நகைகள், வைர நகைகள், 15 வெள்ளிக்கட்டி உட்பட ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பியுள்ளார்.

போலீஸார் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக அந்த நபர் முகக் கவசம், தொப்பி, கையுறை அணிந்து கைவரிசை காட்டியுள்ளார். நேற்றுகாலை இதைக் கண்டு அதிர்ச்சிஅடைந்த உரிமையாளர்கள் இதுகுறித்து மாம்பலம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தென் சென்னை காவல் இணை ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமறைவாக உள்ள நபரைப் பிடிக்கபோலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர். முதல் கட்டமாக சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம்விசாரணை நடைபெற்று வருகிறது.சில லாக்கர்களை உடைக்க முடியாததால் அதிலிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in