Published : 22 Oct 2020 07:14 AM
Last Updated : 22 Oct 2020 07:14 AM

நாடு முழுவதும் இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட மெயில், பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றம்

சென்னை

நாடுமுழுவதும் 200-க்கும் மேற்பட்ட மெயில்கள், பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றிரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பயண நேரம் அதிகபட்சமாக 60 நிமிடங்கள் வரை குறையும். அதேநேரம் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 இருந்து ரூ.30 வரை உயர வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரயில்வேயில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ரயில்களின் காலஅட்டவணை வெளியாகும். இதற்கிடையே, புதிய காலஅட்டவணை தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாடுமுழுவதும் இருக்கும் ரயில்வே மண்டலங்களில் 200-க்கும்மேற்பட்ட பயணிகள், மெயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டு அதற்கான உத்தரவை ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.

இதில் தெற்கு ரயில்வேயில் மதுரை - விழுப்புரம், மயிலாடுதுறை - திண்டுக்கல், ஈரோடு - திருநெல்வேலி, திருச்சி - ராமேசுவரம், புதுச்சேரி - திருப்பதி, விழுப்புரம் - திருப்பதி, அரக்கோணம் - சேலம் ஆகிய 7 ரயில்களும் (14 இணை ரயில்களாக) மாற்றப்பட்டுள்ளன. வரும் புதிய காலஅட்டவணையில் இந்த ரயில்கள் விரைவு ரயில்களாக சேர்க்கப்பட்டு இயக்கப்படும்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு 250-க்கும் மேற்பட்டபயணிகள், மெயில் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. புதிய காலஅட்டவணையில் இதற்கான முழு விபரமும் இடம்பெறும். இதன்மூலம் பயணிகளின் பயண நேரம் 30 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 60 நிமிடங்கள் வரை குறைய வாய்ப்புள்ளது. அதேபோல், விரைவு ரயில்களுக்கான கட்டணமும் வசூலிக்கப்படும். அதாவது, பயணிகள் ரயில்களில் தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 இருந்து ரூ.30 ஆக உயர வாய்ப்புள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்’’ என்றனர்.

இது தொடர்பாக பயணிகள் தரப்பில் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் பயணிகள் ரயில்களின் சேவை இன்னும் தொடங்காத நிலையில், தற்போது சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், வழக்கமான ரயில்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது, பெரும்பாலான ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றுவது மறைமுக கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். இதனால், சாதாரண சிறிய நகர்ப்புற பயணிகள் பாதிக்கப்படுவார்கள்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x