

விவசாயிகள் எளிதாக கடன் பெற, மத்திய கூட்டுறவு வங்கிகளில் விரைவாக கணக்கு தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வரும் விவசாயக் கடன்களை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி அதன் மூலமாகவே பெற வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்,
கடந்த ஜூலை 7-ம் தேதி உத்தரவிட்டுள்ளார். இந்தபுதிய நடைமுறையால் கிராமப்புற விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
மத்திய கூட்டுறவு வங்கிகளில் வங்கிக்கணக்கு தொடங்க கால அவகாசம் வழங்காமல், இந்தபுதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே விவசாயக் கடன்களை வழக்கம்போல தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவே வழங்க வேண்டும். அத்துடன் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி அதன் மூலமாகவே பெற வேண்டும் என்ற உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘‘விவசாயிகள் பயிர்க்கடன்களை உடனடியாக பெற முடியாது என்பதால், இந்த புதிய நடைமுறையை நவ.1-ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். மேலும்விவசாயிகள் அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் எளிதாக கணக்கு தொடங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 33 விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரத்து 256 கோடி அளவுக்கு விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும்,மேலும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு,
அவற்றை விவசாயிகள் மூலம் பூர்த்தி செய்து மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, ‘‘தமிழகம் முழுவதும் மொத்தம் 4,450 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் 90 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய கூட்டுறவு வங்கிகளில் போதிய பணியாளர்கள் இல்லாத சூழலில் விவசாயிகளுக்கு கணக்குதொடங்க நீண்ட காலமாகும். எனவே மத்திய கூட்டுறவு வங்கிகளில் விரைவாகவும், எளிதாகவும் கணக்கு தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு வரும் அக்.28-க்குள் பதிலளிக்க வேண்டும்.
அதேபோல விவசாயக் கடன்களைப் பெற பிற மாநிலங்களில் என்ன நடைமுறை அமலில் உள்ளது என்பது குறித்து நபார்டு வங்கியும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்.28-க்கு தள்ளி வைத்துள்ளார்.