

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் போன்ற இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன
இந்நிலையில் இக்கடைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருள் மூட்டைகள் எடைக் குறைவாக இருப்பதாக நியாய விலைக் கடை ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நியாய விலைக்கடை ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கிடங்குகளில் இருந்து நியாய விலைக்கடைகளுக்கு மூட்டைகள் லாரிமூலம் அனுப்பி வைக்கப்படும்போது, வரும் வழியிலேயே ஒவ்வொரு மூட்டையிலும் குத்தூசி மூலம் துளையிட்டு அரிசி,சர்க்கரை, பருப்பு, கோதுமைபோன்றவற்றை எடுத்துவிடுகின்றனர்.
ஒவ்வொரு மூட்டையிலும் 3 முதல் 5 கிலோ வரை உணவுப் பொருள் எடை குறைவாக உள்ளது. ஒவ்வொரு தடவையும் மூட்டை வரும்போது எடை போட்டுவாங்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
இந்த முறைகேடுகள் குறித்து நாங்கள் புகார் தெரிவித்தும், அதைத் தடுக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடைகளில் ஆய்வின்போது மூட்டைகள் எடை குறைவாக இருந்தால் எங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பேக்கிங் முறையில் உணவுப் பொருட்களை வழங்கினால் வரும் வழியில் திருடப்படுவதை தடுக்கலாம் என்றார்.