

வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பிரம்ம தீர்த்தம் மற்றும் சங்கு தீர்த்தக் குளத்தை ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து மராமத்துப் பணிகளைமேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயிலின் முகப்பு பகுதியில் பிரம்ம தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரி சீரமைக்கப்படாமல் உள்ளது.
மேலும், இக்குளத்தின் கரைப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு நீர்வரத்து கால்வாய்கள் முற்றிலும் அடைபட்டுவிட்டன. இதேபோல் சந்நிதித் தெருவில் 12 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட சங்கு தீர்த்தக் குளத்தில் சகதிகள் நிறைந்து முட்புதர்கள் மண்டியுள்ளன. எனவே இரு குளங்களையும் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தொடந்துகோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட இரு குளங்களையும் சீரமைக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பிரம்மதீர்த்தக் குளத்தையும் ரூ.60 லட்சம்மதிப்பீட்டில் சங்கு தீர்த்தக் குளத்தையும் தூர் வாரி, சீரமைக்கும் வகையில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இக்குளங்களின் சீரமைப்புப் பணிகள் தொடங்கும் என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.