

ஆயுதபூஜை சிறப்பு சந்தை இந்த ஆண்டு நடைபெறாது என்று கோயம்பேடு சந்தை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி, பொங்கல், ஆயுதபூஜை போன்ற பண்டிகை காலங்களில், பூஜைகளுக்கு தேவையான பொருட்களை மலிவாக, ஒரே இடத்தில் வாங்கிச் செல்லும் வகையில் கோயம்பேடு சந்தை நிர்வாகம் சார்பில், அதன் வளாகத்தில் சிறப்பு சந்தை அமைக்கப்படுவது வழக்கம். ஆயுதபூஜை சிறப்பு சந்தையில், பூஜைக்கு தேவையான பொரி, கடலை, கரும்பு, பூசணிக்காய், நாட்டுச் சர்க்கரை, மஞ்சள் கொத்து, மாவிலை தோரணங்கள், வாழைக் கன்றுகள், பழ வகைகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இவற்றை வாங்க பொதுமக்களும் பெருமளவில் வருவார்கள்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, தற்போது காய்கறி சந்தை மட்டும் திறக்கப்பட்டுள்ளது. அதிலும் மொத்தமுள்ள சுமார் 2 ஆயிரம் கடைகளில் 200 கடைகளை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தை முழுவதுமாக மூடப்பட்டிருந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்புச் சந்தையை, கோயம்பேடு சந்தை நிர்வாகம் திறக்கவில்லை.
தற்போது காய்கறி சந்தை திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஆயுதபூஜை சிறப்புச் சந்தை திறக்க வாய்ப்புள்ளதா என கோயம்பேடு சந்தை நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கூட்டத்தை கட்டுப்படுத்தவே கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தன. தற்போது காய்கறி சந்தைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற சந்தைகள் திறக்கப்படவில்லை. எனவே, கரோனா பரவலை தடுக்க, கோயம்பேடு சந்தையிலோ, பிற பகுதியிலே ஆயுதபூஜை சிறப்பு சந்தை திறக்கப்படாது’’ என்றனர்.