

செல்பி எடுக்கும் மோகத்தில் புகைப்படங்களை யாருக்கும் பகிர வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் துணை ஆணையர் எச்.ஜெயலட்சுமி தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சென்னையில் இயங்கி வருகிறது. இந்த பிரிவுடன் சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
தற்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த வகை குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் பெண் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
அதன்படி, சென்னை பெருநகரில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களும் அம்மா ரோந்து வாகனத்தின் மூலம் தங்களது எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இணையதள குற்றங்கள் மற்றும் கரோனா தடுப்பு குறித்து கடந்த 2 நாட்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, ‘இணையதளத்தில் குழந்தைகள் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகள்பாதுகாப்பாக கைப்பேசியை பயன்படுத்துகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். மேலும், செல்பி மோகத்தில் புகைப்படங்களை யாருக்கும் பகிரக் கூடாது. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபரிடம் நட்பு அழைப்பு தரக்கூடாது. அவர்களிடம் தங்களது பயனாளர் குறியீடுகளை பகிரக்கூடாது. சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தும்போது மிகக் கவனமுடன் இருக்க வேண்டும்,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச் செயல்கள் நடந்தால் பொது மக்கள் தயக்கமின்றி காவல் துறையை அணுகலாம். இதற்காக காவலன் எஸ்ஓஎஸ் செயலி மற்றும் 1091, 1098, 9150250665 (வாட்ஸ்-அப்) எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று போலீஸார் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.