Published : 22 Oct 2020 06:52 AM
Last Updated : 22 Oct 2020 06:52 AM

விலை உயர்வை கட்டுப்படுத்த கோயம்பேடு சந்தைக்கு எகிப்து வெங்காயம் வருகை: கிலோ ரூ.60-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தைக்கு எகிப்து வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. இது கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தின் வெங்காய தேவையை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பூர்த்தி செய்கின்றன. கோயம்பேடுசந்தைக்கும் இம்மாநிலங்களில் இருந்தே அதிக அளவில் வெங்காயம் வரவழைக்கப்படுகிறது. வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் மேற்கூறிய மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அங்கு வெங்காய பயிர்கள் அழிந்தன. அதன் விளைவாக அம்மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்து, விலை உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மொத்த விலையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80-க்கு விற்கப்பட்டது.

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த, அரசு கூட்டுறவுத் துறை சார்பில் பண்ணை பசுமை மற்றும் நகரும் கடைகள் மூலம் கிலோ ரூ.45 விலையில் வெங்காயத்தை விற்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், கோயம்பேடு சந்தை வியாபாரிகள் எகிப்திலிருந்து வெங்காயத்தை வரவழைத்து, குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க பொருளாளர் பி.சுகுமார் கூறியதாவது: வழக்கமாக தினமும் 80 லோடு வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு வரும். இது தற்போது 40 ஆக குறைந்துள்ளது. தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டு வருகிறது. எகிப்திலிருந்தும் வெங்காயம் வரவழைக்கப்பட்டு கிலோ ரூ.60-க்குவிற்கப்பட்டுகிறது. தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த பருவ அறுவடை நடைபெறும்போதுதான் விலை குறையவாய்ப்புள்ளது. விலை குறைவதற்கு எகிப்து வெங்காயத்தின் வருகை உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவல்லிக்கேணி ஜாம் பஜார்காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முகமது அலி கூறும்போது, “விலை உயர்த்தி வெங்காயம் விற்றால் பொதுமக்கள் வாங்க முன்வருவதில்லை. எனவே இங்கு சில்லறை விலையில் கிலோ ரூ.100-க்கு விற்கிறோம். ஓட்டல் போன்றவற்றுக்கு ரூ.90-க்குவிற்பனை செய்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x