Published : 21 Oct 2020 08:09 PM
Last Updated : 21 Oct 2020 08:09 PM

வெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண் சட்டம் அமலானால் என்ன ஆகும்?- ஸ்டாலின் கேள்வி

வெங்காயத்தை முழுவீச்சில் அரசு கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கு உரிய போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெங்காயத்தின் மூலமாக மற்றொரு ஊழலுக்கு வழி கண்டுவிடக் கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“சாதாரண சமையலுக்கும் பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருளாம் வெங்காயத்தைப் பதுக்கியதால் இன்றைக்கு அதன் விலை, எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு, கிடுகிடுவென உயர்ந்து - தாய்மார்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ஒருபுறம் விளைந்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகளின் வேதனைக் கண்ணீர். மறுபுறம், வெங்காயத்தின் தாங்க முடியாத விலை உயர்வால் தாய்மார்கள் பெருக்கிடும் கண்ணீர். இத்தகைய கண்ணீரில் களிநடம் போடுகிறது எடப்பாடி அதிமுக அரசு.

அதிமுக அரசு கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்போம் என்றாலும், அனைவருக்கும் வெங்காயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. இப்போதே வெங்காயம் கிலோ 130 ரூபாய் வரை விற்கிறது. இந்நிலையில் அதிமுக அரசு ஆதரித்துள்ள மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்கள் அமலானால் எவ்வளவு வேண்டுமானாலும் தேக்கி வைக்கலாம்; இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் விலை ஏறலாம்.

இந்த அனுபவத்திற்குப் பிறகாவது மத்திய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் அதிமுக அரசு, தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்றும்; வெங்காயத்தை முழுவீச்சில் அரசு கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கு உரிய போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். வெங்காயத்தின் மூலமாக மற்றொரு ஊழலுக்கு வழி கண்டுவிடக் கூடாது”.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x