

சென்னையில் சுதந்திர போராட்ட தியாகி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நேதாஜி நினைவு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
அகில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் வழித்தோன்றல்கள் சங்கம் சார்பில் சிறந்த நாட்டுப்பற்றாளர்களுக்கு நேதாஜி விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இத்துடன் சேர்ந்து, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள், ரெப்கோ வங்கியின் 47-ம் ஆண்டு விழா மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஒசி) நிறுவனம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் விழா ஆகியவையும் நடந்தன.
விழாவுக்கு சுதந்திர போராட்ட தியாகி தங்கவேலனார் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் கே.குருமூர்த்தி வரவேற்றார். இதில், முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ், முன்னாள் சிறைத்துறை டிஐஜி எஸ்.ராஜேந்திரன், ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குநர் ஆர்.வரதராஜன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், ஐஓசி நிறுவன அதிகாரி தியாகராஜன், தொழிலதிபர் நல்லி. குப்புசாமி, மருத்துவர் எஸ்.விஜயராகவன் ஆகியோர் பேசினர். விழாவில், சுதந்திர போராட்ட தியாகி தங்கவேலனாருக்கு நேதாஜி நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதே போல நாட்டுப்பற்றாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.