

ஓசூர் மலர்ச் சந்தையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ரோஜா, மல்லி, கனகாம்பரம், சாமந்தி உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஓசூர், தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர், மத்திகிரி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இதமான தட்பவெப்ப நிலை மற்றும் மண்வளம் காரணமாக ரோஜா, பட்டன் ரோஜா, குண்டுமல்லி, சாமந்தி, கனகாம்பரம், செண்டு, சம்பங்கி மற்றும் அலங்காரப் பூக்களான கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட பல்வேறு மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு விளையும் வாசமிக்க, தரமான மலர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளதால் இப்பகுதியில் பசுமைக்குடில் அமைத்தும் திறந்த வெளியிலும் சொட்டுநீர்ப் பாசன முறையில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மலர் சாகுபடியில் 2000-க்கும் மேற்பட்ட சிறிய விவசாயிகள், 1000-க்கும் மேற்பட்ட பெரிய விவசாயிகள் என மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் மலர்ச் சந்தையில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாகப் பாதிக்கப்பட்டிருந்த மலர்களின் விற்பனை அக்டோபர் 25-ம் தேதி ஆயுத பூஜை மற்றும் 26-ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் மலர்களின் விலை உயர்ந்து வருவதால், மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஓசூர் மலர்ச் சந்தை வியாபாரி சோமசேகர் கூறியதாவது:
''நடப்பாண்டில் நல்ல மழை பெய்து வருவதால் மலர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதற்கேற்ற வகையில் ஆயுத பூஜை, விஜயதசமியும் வருவதால் சந்தையில் பூக்களின் தேவை அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.500 முதல் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப் பூவின் விலை ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
அதேபோல ரூ.80-க்கு விற்பனையான ஒரு கிலோ பட்டன் ரோஜாவின் விலை ரூ.160 முதல் ரூ.180 வரையும், சம்பங்கி ரூ.40-ல் இருந்து ரூ.120-க்கும், சாமந்தி ரூ.60-லிருந்து ரூ.160-க்கும், மேரிகோல்டு ரூ.100-லிருந்து ரூ.200-க்கும், நாட்டு சாமந்தி ரூ.40-லிருந்து ரூ.100-க்கும் மற்றும் காம்புடன் கூடிய ஒரு கட்டு ரோஜாப் பூக்கள் (20)- ரூ.20-லிருந்து ரூ.80-க்கும் என அனைத்து மலர்களின் விலையும் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த மலர்ச் சந்தையில் மலர்களை வாங்கிச் செல்ல தமிழ்நாடு மலர் வியாபாரிகள் மட்டுமன்றி கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வருகின்றனர். இதில் பெங்களூரு நகரைச் சேர்ந்த சிறு வியாபாரிகளே அதிக அளவில் வந்து மலர்களை வாங்கிச் செல்கின்றனர். ஆயுதபூஜை தினத்தன்று மலர்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது'' .
இவ்வாறு சோமசேகர் கூறினார்.
இதுகுறித்து தளி தோட்டக்கலைத்துறை அலுவலர் சுப்பிரமணியன் கூறும்போது, ''ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் மலர் உற்பத்தி சிறப்பாக உள்ளது. தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு செண்டு மல்லிப்பூ நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல பட்டன் ரோஜா பயிரிடும் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகையாகவும், இயற்கை முறையில் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையாகவும் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே தகுதியுள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு மானியம் மற்றும் ஊக்கத்தொகை பெற்று பயன் அடையலாம்'' என்றார்.