

சிவகங்கை மாவட்டத்திற்கு தொடர்ந்து 30 நாட்கள் பெரியாறு நீர் திறக்க கதர் கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் முன்னிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48-வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6,748 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் பெரியாறு விஸ்தரிப்பு, நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில் செப்.27-ம் தேதி ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு திறக்கவில்லை. இதை கண்டித்து அக்.3-ம் தேதி விவசாயிகள் போராட்டம் அறிவித்தனர்.
இதையடுத்து அக்.4-ம் தேதியில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்தநிலையில் திடீரென தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் ஜி.பாஸ்கரன், ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர் விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், முன்னாள் எம்பி செந்தில்நாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பவளகண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைந்து ஐந்து மாவட்ட வைகை-பெரியாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், நிர்வாகிகள் திருமலை முத்துராமலிங்கம், அய்யனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்ட முடிவில் சிவகங்கை மாவட்டத்திற்கு தொடர்ந்து 30 நாட்களுக்கு தண்ணீர் குறைப்பின்றி பெரியாறுநீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.