

மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து வெளியில் உள்ள ரவுடிகளுக்கு வரும் உத்தரவால் புதுச்சேரியில் கொலைகள் அதிகரித்துள்ளன. சிறையில் நடத்திய சோதனையில் 12 செல்போன்கள் பறிமுதலாகியுள்ளன.
புதுச்சேரியில் மீண்டும் கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஒன்றரை மாதங்களில் 8 கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. கரோனா கால ஊரடங்கு தளர்வில் பழிக்குப் பழியாக கொலைச் சம்பவங்களும், மாமூல் தராததால் பல கொலைச் சம்பவங்களும் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன.
குறிப்பாக, காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, இக்கொலைச் சம்பவங்களுக்குக் காரணம், காலாப்பட்டிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளிடமிருந்து வந்த உத்தரவுகள்தான் என்பது தெரிந்தது. முன்பு இருந்ததுபோல் சிறையிலிருந்து செல்போனில் வெளியே உள்ள ரவுடிகளிடம் பேசி மாமூல் வசூலிப்பது மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளது தெரியவந்தது. மாமூல் தராததாலும், முன்விரோதத்தாலும் கொலைகள் நடந்துள்ளன.
இதையடுத்து, சிறையில் நேற்று (அக். 20) இரவு திடீர் சோதனை நடத்தியபோது 12 செல்போன்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுபற்றி, காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "சிறையிலுள்ள கைதிகளுக்கும் வார்டன்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. செல்போன்களை அவர்கள் வாங்கித் தந்துள்ளனர். இணையச் செயலியில் (கூகுள் பே) பணம் பெற்று செல்போனைச் சிறைக்குள் ரவுடிக் கைதியொருவர் விற்றுள்ளார். சாதாரண செல்போன் ரூ.12 ஆயிரத்துக்கும், ஆண்ட்ராய்டு போன் ரூ.25 ஆயிரத்துக்கும் விற்றதைக் கண்டறிந்தோம். இனி நடவடிக்கை கடுமையாக இருக்கும்" என்றனர்.
இதுபற்றி முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
"கடந்த ஆட்சிக்காலத்தில் முதல்வராக ரங்கசாமி இருந்தபோது ரவுடிகளைக் கட்டுப்படுத்தவில்லை. அவரது ஆட்சிக்காலத்தில் முதல்வர் அலுவலகத்திலேயே ரவுடிகள் இருந்தனர். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு குண்டர் தடுப்புச் சட்டத்தில் 29 பேரைச் சிறையில் அடைத்தோம்.
வெளியில் இருக்கும் தங்கள் கூட்டாளிகள் மூலம் சிறையில் இருந்து ரவுடிகள் மாமூல் வசூலிப்பது இன்னும் நடக்கிறது. பல முறை சிறையில் சென்று செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால், செல்போனில் மிரட்டுவது தொடர்ந்தது. சிறையில் பணிபுரியும் சில வார்டன்கள் உதவியுடன் செல்போன் கொண்டு செல்வதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. தற்போது 12 செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளோம். சிறையிலிருந்து வந்த உத்தரவுகளே அண்மையில் மேட்டுப்பாளையம் பகுதிகளில் நடந்த கொலைகளுக்குக் காரணம்.
செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க ஜாமரின் சக்தியை அதிகரிக்க உள்ளோம். வார்டன்களை மாற்ற உள்ளோம். தவறு செய்த வார்டன்கள் தண்டிக்கப்படுவார்கள். கொலைகளுக்குக் காரணம் சிறையில் இருப்போர், வெளியில் இருப்போர் மூலம் மிரட்டி மாமூல் கேட்டுத் தராதது முக்கியக் காரணமாகத் தெரிய வந்துள்ளது. மாமூல் கேட்போரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். உளவுத்துறையும் இவ்விஷயத்தைக் கண்காணிக்க உள்ளது. காவல்துறை மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. காவல்துறையிலும் சில புல்லுருவிகள் உள்ளன. அதைக் களைவோம்".
இவ்வாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.