Published : 21 Oct 2020 03:01 PM
Last Updated : 21 Oct 2020 03:01 PM

காவல்துறை வீரவணக்க நாள்: டிஜிபி, காவல் ஆணையர், காவல், ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி

சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது டிஜிபி, காவல் ஆணையர், காவல், ராணுவ உயர் அதிகாரிகள், ஓய்வுபெற்ற காவல் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘காவலர் வீரவணக்க நாள்’ (Police Commemoration Day) ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கடந்த 2019 செப்டம்பர் 1 முதல் 2020 ஆகஸ்டு 31 வரை ஓராண்டு காலத்தில் இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த 265 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகருமான எம்.கே.நாராயணன், லெப்டினன்ட் ஜெனரல் பி.என்.ராவ், ராணுவ உயர் அதிகாரிகள், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டிஜிபிக்கள், ஐஜிக்கள், தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காவலர் வீரவணக்க நிகழ்ச்சிக்கு கரோனா பாதுகாப்புப் பணியில் வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியின் மனைவி கவிதா உட்பட வீர மரணமடைந்த காவலர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி பேசும்பொழுது, கடந்த ஆண்டில் இந்தியாவில் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் பெயர்களை நினைவு கூர்ந்தார்.

பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக, சென்னை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறையில் பணியின்போதும், கரோனா தொற்றினாலும் உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வீரக்காவலர் நினைவுருக் கற்களை தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று மாலை திறந்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x