

கன்னியாகுமரி - திப்ருகர் ரயிலை மதுரை வழியாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதிக்கு 2011-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் வாராந்திர ரயில் அறிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இந்தியாவிலேயே அதிக தூரமாக அதாவது 4273 கி.மீ. தூரம் இயக்கப்படும் ரயில் ஆகும்.
இந்த ரயில் திருவனந்தபுரம் அருகில் உள்ள கொச்சுவேலியில் இருந்து எர்ணாகுளம் வழியாக திப்ருகருக்கு சிறப்பு ரயிலாக இயக்கவே திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இட நெருக்கடி ஏற்படும் என்றும் வேறு புதிய ரயில்களைக் கொச்சுவேலியில் இருந்து கேரளா பயணிகளுக்கு இயக்க முடியாமல் போகும் என்பதாலும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கன்னியாகுமரிக்கு இந்த ரயிலை மாற்றி விட்டதாகப் பரவலான குற்றச்சாட்டு உண்டு. இந்நிலையில் குமரி மக்களுக்குப் பயன்படாமல் இருந்த இந்த ரயில் இப்போது தினசரி ரயிலாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துக் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்றுவதால் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் இட நெருக்கடி அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் ஒருவழிப் பாதையாக உள்ள கன்னியாகுமரி – திருவனந்தபுரம் பாதையிலும் அதிக அளவில் டிராக் நெருக்கடி ஏற்படும். இதனால் இந்தப் பாதையில் தற்போது இயங்கிவரும் பழைய ரயில்கள் கால அட்டவணையில் மாற்றம் செய்து அதிக நேரம் கிராசிங் ஆக நிறுத்தி வைக்கப்படும் நிலை வரும். நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையில் உள்ள 72 கி.மீ தூரத்தைக் கடக்க இனி காலை மற்றும் மாலையில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
இந்த ஒரே ஒரு ரயிலால் கன்னியாகுமரி வரை இயக்கப்பட்டுவந்த பல ரயில்கள் நாகர்கோவில் வரை மட்டுமே இனி இயக்கப்படும் எனவும் கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – திப்ருகர் ரயில் 2000 கி.மீ.க்கு மேல் ஓடும் ரயில் ஆகையால் கன்னியாகுமரி மற்றும் திப்ருகர் என இரண்டு இடங்களிலும் பிட்லைன் பராமரிப்பு செய்ய வேண்டியுள்ளது. இனி இந்த ரயில் காலையில் கன்னியாகுமரி வந்துவிட்டு காலிப் பெட்டிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்குப் பராமரிப்புக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு வந்த பெட்டிகள் பராமரிப்புப் பணிகள் நிறைவுபெற்று மீண்டும் மதியத்துக்கு மேல் காலிப் பெட்டிகள் கன்னியாகுமரி கொண்டு செல்லப்படும். அதன் பின்னர் கன்னியாகுமரியிலிருந்து திப்ருகர் ரயிலாக இயங்கும்.
இந்த ரயிலுக்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பகல் நேரத்தில் தினமும் பிட்லைன் பராமரிப்பு செய்யப்படும். இவ்வாறு செய்வதால் குமரி மாவட்டப் பயணிகள் நலனுக்காக புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் பிட்லைன் இட நெருக்கடியாக இருக்கின்ற காரணத்தால் புதிய ரயில்கள் இயக்க முடியாமல் போகும். குறிப்பாக 2000 கி.மீ.க்கு மேல் இயங்கக் கூடிய ரயில்களான தமிழ்நாட்டு வழித்தடத்தில் செல்லும் கன்னியாகுமரி – நிஜாமுதீன் திருக்குறள் ரயிலைத் தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்குதல், கன்னியாகுமரி - ஹவுரா ரயிலைத் தினசரி ரயிலாக இயக்குதல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்திலிருந்து மங்களூருவுக்கு இயக்கப்படும் இரவு நேர ரயில்கள் மூன்றில் எதாவது ஒரு தினசரி ரயிலை திருநெல்வேலி அல்லது நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், திருவனந்தபுரம் - நாகர்கோவில் ரயில் பாதை ரயில் டிராக் நெருக்கடி நிறைந்த காரணத்தால் நீட்டிப்பு செய்ய முடியாது என்று ரயில்வே துறை தொடர்ந்து மறுத்து வருகிறது. அப்படியிருக்கையில் இந்த கன்னியாகுமரி - திப்ருகர் ரயிலை யாரும் கோரிக்கை வைக்காமலேயே தினசரி ரயிலாக மாற்றம் செய்து கேரளப் பயணிகளின் வசதிக்காக இயக்குகின்றனர்.
தென் மாவட்டங்களிலிருந்து தமிழகம் வழியாகப் பயணம் செய்ய 1000 கி.மீ.க்கு மேல் பயணம் செய்யும் ஒரு தினசரி ரயில் கூட இதுவரை இயக்கப்படவில்லை. மதுரை, திருச்சி போன்ற இடங்களில் இருந்துகூட ஒரு தினசரி ரயில்கூட இதுவரை வெகுதூரத்துக்கு இயக்கப்படவில்லை. எனவே, இந்த கன்னியாகுமரி - திப்ருகர் ரயிலை கேரள வழித்தடத்துக்குப் பதிலாக மதுரை வழியாக மாற்றிவிட தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும்'' என்றார்.