தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 10 மணி வரை நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 10 மணி வரை நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Updated on
1 min read

பண்டிகைக் காலம், நோய்ப் பரவல் குறைவதைக் கருத்தில் கொண்டு நாளை முதல் அனைத்துக் கடைகள், உணவகங்கள், தேநீர்க் கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 10 மணி வரை மாற்றி அமைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது.

மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தினைக் கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் அக்.22 (நாளை) முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

தமிழக அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், நோய்த் தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வரும் இந்தச் சூழ்நிலை நீடிக்க எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், நோய்த் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கடைகள், பொது இடங்களில் அதிகம் கூடுவதைத் தவிர்க்கவும், முகக்கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும் அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும், பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in