Last Updated : 21 Oct, 2020 02:49 PM

 

Published : 21 Oct 2020 02:49 PM
Last Updated : 21 Oct 2020 02:49 PM

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய நிலுவைப் பிரச்சினை; கிரண்பேடிக்கு எதிராகப் போராட்டம்: திமுக முடிவு

ஆசிரியர்களுக்கான ஊதிய நிலுவைப் பிரச்சினை தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்படும் என, காரைக்கால் திமுக அமைப்பாளர் ஏ.எம்.ஹெச்.நாஜிம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.ஹெச்.நாஜிம் இன்று (அக். 21) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரி மாநிலம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்குக் கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 10 மாதங்களாக ஊதியம் இல்லாமல் எப்படிக் குடும்பம் நடத்த இயலும் என்பதை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உணர வேண்டும்.

அமைச்சரும், முதல்வரும் இதற்கான கோப்புகளைத் தயார் செய்து அனுப்பியிருந்தாலும், பட்ஜெட்டில் உரிய தொகை ஒதுக்கீடு செய்திருந்தாலும் கூட, கோப்புகள் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பித் திருப்பி அனுப்பும் பணியைத்தான் துணைநிலை ஆளுநர் செய்து வருகிறார்.

ஒருவேளை ஏதேனும் தவறு இருந்தால், அதற்காக அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், அதை விடுத்து எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக ஊதியத்தை நிறுத்தி வைப்பது சரியாகாது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று (அக். 20) காரைக்காலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை திமுக சார்பில் நானும், கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.

அப்போது, துணைநிலை ஆளுநர் இதுகுறித்து உரிய நல்ல முடிவு எடுக்காவிட்டால், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களையும் அழைத்துப் பேசி துணைநிலை ஆளுநருக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்தலாம் என கூட்டணிக் கட்சியினர் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக புதுச்சேரியில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடமும் கலந்து பேசி போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்.

காரைக்கால் வாரச் சந்தை

கரோனா பொது முடக்கம் காரணமாக காரைக்காலில் செயல்பட்டு வந்த வாரச் சந்தை மூடப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மீண்டும் சண்டே மார்க்கெட், மதகடிப்பட்டு வாரச் சந்தை திறக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் காரைக்காலில் மக்களுக்குப் பெருமளவில் பயனளிக்கும் வாரச் சந்தையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

வாரச் சந்தை செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதித்தாலும், பொதுமக்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்".

இவ்வாறு நாஜிம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x