பாலியல் வக்கிரத்தோடு சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை தேவை: ஜி.ராமகிருஷ்ணன்

ஜி.ராமகிருஷ்ணன்: கோப்புப்படம்
ஜி.ராமகிருஷ்ணன்: கோப்புப்படம்
Updated on
1 min read

பாலியல் வக்கிரத்தோடு சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.ராமகிருஷ்ணன் இன்று (அக். 21) வெளியிட்ட அறிக்கை:

"ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு திரைக்கலைஞர் விஜய் சேதுபதி ஒப்பந்தமானதையொட்டி எதிரும் புதிருமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் அவர் அந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என்ற கருத்துடைய சிலர் அவரது குழந்தையை முன்வைத்து பாலியல் வக்கிரத்தோடு சமூக வலைதளங்களில் பதிவுகள் இட்டுள்ளனர்.

உலகமே ஒத்துப்போகிற ஒரு கருத்தோடு கூட எந்தவொரு தனி மனிதனும் மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கு உரிமையுண்டு. அந்தக் கருத்துக்கு எதிரான கருத்துகளைக் கடுமையாக விமர்சிப்பதற்கான உரிமையும் ஒருவருக்கு உண்டு. இந்தக் கருத்து தளத்தைத் தாண்டி எந்தவொரு தனி மனிதரையோ அவருடைய குடும்பத்தினரையோ வக்கிரத்தோடும் வன்மத்தோடும் விமர்சிப்பதற்கான உரிமை எவருக்கும் கிடையாது.

விஜய் சேதுபதியின் கருத்தை அல்லது முடிவை விமர்சிப்பதற்காக அவரது குழந்தையை முன்வைத்து வக்கிரமான முறையில் பதிவிடுவதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இப்படிப் பதிவிட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

இத்தகைய பதிவுகள் கடந்த காலத்திலும் பெண் பத்திரிகையாளர்களை முன்வைத்து வெளிவந்திருக்கின்றன. சில பத்திரிகையாளர்களின் மதத்தை முன்வைத்தும் வக்கிரமாக சிலர் பதிவிட்டுள்ளனர். இவை குறித்து சம்பந்தப்பட்டவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காவல்துறையிடம் பலமுறை புகாரளித்தும் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததன் நீட்சியே இத்தகைய நபர்களின் பதிவுகள்.

விஜய் சேதுபதியின் குழந்தை குறித்த பதிவுகளின் மீது நடவடிக்கை எடுப்பதோடு தமிழக காவல்துறை நீண்ட நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்ட புகார்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது".

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in