புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் நாளை வருகை; 200 மாட்டு வண்டிகளோடு வரவேற்பு அளிக்க விவசாயிகள் ஏற்பாடு

முதல்வர் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளைப் பார்வையிடும் அமைச்சர் விஜயபாஸ்கர்.
முதல்வர் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளைப் பார்வையிடும் அமைச்சர் விஜயபாஸ்கர்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி ஆய்வு மற்றும் புதிய நலத்திட்டங்களை வழங்குவதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி நாளை வருகை தரவுள்ளார். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும், அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கியும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில், வரும் தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நாளை (அக். 22) வருகை தரவுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் அவர், பின்னர் அங்கிருந்து கார் மூலம் விராலிமலை செல்கிறார்.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வரை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தனது தொகுதியான விராலிமலை தொகுதி மக்களைத் திரட்டி உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

விராலிமலையில் உள்ள ஐடிசி நிறுவனத்தைப் பார்வையிட்ட பிறகு, இனாம் குளத்தூர் பிரிவு சாலை ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்று அமைக்கப்பட்டுள்ள உலோகச் சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.

இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே 100 அடி நீளமுள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியேற்றுகிறார். பின்னர், காவிரி-குண்டாறு திட்டத்தை அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாய் பகுதியில் விவசாயிகள் சார்பில் சுமார் 200 மாட்டுவண்டிகள், பயிர்கள், வேளாண் விளைபொருட்கள், வேளாண் கருவிகளோடு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பின்னர், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணி மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய மருத்துவப் பிரிவுகளை தொடங்கி வைப்பதோடு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். அங்கு, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், தொழில் முனைவோர், சுய உதவிக் குழுவினரைச் சந்திக்க உள்ளார்.

முதல்வர் வருகையையொட்டி ஆட்சியர் அலுவலகம் புனரமைப்பு, கூடுதலாக மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு துறை உயர் அலுவலர்களும் வந்து பணிகளைக் கவனித்து வருகின்றனர்.

மேலும், ஆட்சியர் அலுவலகம் வருவோர் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல்வர் வந்து செல்லும் வழி நெடுகிலும் அதிமுக கொடி, தோரணங்கள், பதாகை வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in