Published : 21 Oct 2020 01:38 PM
Last Updated : 21 Oct 2020 01:38 PM

7.5% உள் ஒதுக்கீடு; ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்: அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என அறிவிப்பு

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, ஸ்டாலின் இன்று (அக். 21) ஆளுநருக்கு எழுதிய கடிதம்:

"கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவினைச் சிதைக்கும் நீட் தேர்வினை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது திமுகவின் தீர்மானமான கோரிக்கை என்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அக்கோரிக்கை நிறைவேறும் வரை, 2017-2018 ஆம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து ஆராய, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலையரசன் தலைமையில் மூத்த வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், 'எம்பிபிஎஸ் மற்றும் பிற மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற (நீட்) அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமை' அளிப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் படித்த மாணவர்களுக்கிடையே ஒரு சமத்துவத்தைக் கொண்டு வரலாம் என தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

மேற்கண்ட முடிவின் அடிப்படையில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு, கடந்த 15.9.2020 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16.10.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால்தான் இந்தக் கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட முடியும்.

ஆகவே, இந்தச் சட்ட முன்வடிவினை ஆதரித்து நிறைவேற்றிய பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் சார்பில் மேற்கண்ட சட்டமுன்வடிவுக்கு உடனடியாகத் தாங்கள் ஒப்புதல் அளித்து, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக ஸ்டாலின் இன்று தன் முகநூல் பக்கத்தில், "மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் இன்னும் அதற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வருகிறார்.

மசோதாவுக்கு உரிய அங்கீகாரத்தை ஆளுநர் உடனடியாக வழங்க வேண்டும் என்று அவருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளேன். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் சட்டப்பேரவையின் உரிமை மற்றும் அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும்.

ஆளுநர் இதில் மேலும் பாராமுகமும், தாமதமும் காட்டுவது நல்லதல்ல. இந்த நேர்வில், மாநில உரிமைகளுக்காக அதிமுக அரசுடன் இணைந்து போராட, திமுக தயாராக இருக்கிறது. எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி, என்னவகைப் போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து அறிவித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x