சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகக் கூறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்: சிங்காரவேலர் கமிட்டி எச்சரிக்கை

சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகக் கூறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்: சிங்காரவேலர் கமிட்டி எச்சரிக்கை
Updated on
1 min read

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்தால், அது தண்டனைக்குரிய குற்றம் என்று, சிங்காரவேலர் கமிட்டி எச்சரித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உடுமலை சாலையிலுள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு ரூ.10,300 கல்விக் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. ஆனால், பள்ளி நிர்வாகம் கூடுதலாக ரூ.10 ஆயிரம் வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகக் கூறி, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் பெற்றோர், சிறப்பு வகுப்புகளுக்கான கூடுதல் கட்டணத்தை செலுத்த மறுத்துள்ளனர். மேலும், அப்பள்ளிக்கான கட்டண விவரத்தை அறிய, அரசு நியமித்த சிங்காரவேலர் கமிட்டிக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக விண்ணப்பித்தனர். இதில் அப்பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதை ஏற்க மறுத்த பள்ளி நிர்வாகம், சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுவதாகக் கூறி கூடுதல் கட்டணம் கேட்டு வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து சிறப்பு வகுப்புகளுக்கான அனுமதி மற்றும் கட்டண விவரங்கள் குறித்து சிங்காரவேலர் கமிட்டிக்கு பெற்றோர் மீண்டும் மனு அளித்துள்ளனர்.

மாணவரின் தந்தை ராமகிருஷ்ணன் கூறும்போது, “அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட ரூ.10 ஆயிரம் வரை சிறப்பு வகுப்புகளுக்கு வசூலிக்கிறார்கள். எனவே சிறப்பு வகுப்புகளுக்கு அனுமதி உள்ளதா? அந்த வகுப்புகளுக்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் உதவியுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக கேள்வி எழுப்பினோம்.

சிங்காரவேலர் கமிட்டியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு தனி அலுவலர் த.மனோகரன் கூறும்போது, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைத் தவிர, தனியார் பள்ளிகள் எந்த வகையிலும் அதிகக் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அப்படி வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in