கோவையில் பலத்த மழை: தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

கோவை நஞ்சப்பா சாலை பார்க் கேட் சிக்னல் அருகே குளம் போல தேங்கிய மழைநீர். படம்:ஜெ.மனோகரன்.
கோவை நஞ்சப்பா சாலை பார்க் கேட் சிக்னல் அருகே குளம் போல தேங்கிய மழைநீர். படம்:ஜெ.மனோகரன்.
Updated on
1 min read

கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவிவந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்தது. வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோவையில் நேற்று மதியம் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், டவுன்ஹால், உக்கடம், வடகோவை, காட்டூர், பீளமேடு, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையினால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ரயில் நிலையம் சாலை மற்றும் நஞ்சப்பா சாலையில் மழைநீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, சாக்கடை கழிவு நீருடன் மழைநீர் கலந்து சாலைகளில் ஓடியது.

தவிர, அவிநாசி சாலை அண்ணா மேம்பாலம், வடகோவை மேம்பாலம், லங்கா கார்னர் ரயில்வே பாலம், கிக்கானி பள்ளி அருகேயுள்ள ரயில்வே பாலம், காட்டூர் காளீஸ்வரா மில் சாலை பாலம் ஆகியவற்றின் கீழ் பகுதியில் 2 அடி முதல் 4 அடி வரை மழைநீர் தேங்கியது. அந்தப் பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டு, மேம்பாலங்களின் மேல் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மோட்டார் மூலம் மழைநீரை உறிஞ்சி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே மினி டெம்போ வேன் ஒன்று சாலையோரம் கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் சிக்கியது. பொதுமக்கள் இணைந்து அந்த வேனை மீட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in