Published : 21 Oct 2020 07:15 AM
Last Updated : 21 Oct 2020 07:15 AM

விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் ஆணையர்

இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய இளைஞருக்கு, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக போலீஸாரின் கண்காணிப்பு பணியை ஆய்வு செய்ய நேற்று காலை 10.55 மணியளவில் தனது காரில் மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி மேம்பாலம் வழியாக சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, மேம்பாலத்தின் எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர், முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதி, இருசக்கர வாகனத்துடன் சறுக்கி கீழே விழுந்தார்.

இதைக் கண்ட காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தனது காரை நிறுத்தி, உடனடியாக இறங்கி வந்து அந்த நபருக்கு உதவினார். பின்னர் தனது கார் ஓட்டுநரிடம் காரிலிருந்து முதலுதவி பெட்டி எடுத்து வரச்சொல்லி, விபத்தில் காயமடைந்த நபருக்கு முதலுதவி செய்ய வைத்தார்.

பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, அங்கு வந்த ராயப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவ ஏற்பாடு செய்தார்.

அதன்பேரில், ராயப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காயமடைந்த இளைஞரை தனது காவல் வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x