Published : 06 Oct 2015 07:10 AM
Last Updated : 06 Oct 2015 07:10 AM

சுங்கச்சாவடி, சுங்க கட்டணம் முறைப்படுத்த குழு நியமனம்: லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் - மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சுங்கச்சாவடி மற்றும் சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்த குழு நியமிக்கப்படும் என லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார். அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும். லாரி வாடகையில் டீடிஎஸ் பிடித்தம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்களாக வேலைநிறுத்தம் நீடித்தது. பல இடங்களில் சுங்கச்சாவடிகளை லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி பாதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் உள்ள 92 லட்சம் லாரிகளில் சுமார் 70 சதவீதம் இயங்கவில்லை.

இதனால், பெரும்பாலான மாநிலங்களில் இருந்து உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால், முட்டை, மருந்து, சிமென்ட், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் ஆங்காங்கே தேக்கமடைந்தன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 6.9 லட்சம் லாரிகளில் 65 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்செங்கோடு, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சரக்குகள் தேங்கின.

இந்நிலையில், லாரி உரிமை யாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு லாரி உரிமையாளர் சங்கங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, நேற்று மாலை அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். மாலை 6 மணிக்கு பிறகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சுங்கச்சாவடி பிரிவு தலைவர் சண்முகப்பா, கமிட்டி உறுப்பினர் கோபால் நாயுடு, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி, மற்ற மாநிலங்களின் நிர்வாகிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது.

சுங்கச்சாவடிகள் மற்றும் சுங்க கட்டணங்களை முறைப்படுத்த குழு அமைக்கப்படும். அந்தக் குழுவில் மத்திய அரசு சார்பில் 2 பேரும், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் 2 பேரும் இடம் பெறுவர். சுங்கச்சாவடிகளை முறைப்படுத்துவது தொடர்பாக முழுமையாக ஆய்வு நடத்தப்படும். டிசம்பர் 15-ம் தேதிக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்பு குறித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகள் மீண்டும் தனியாக ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து அமைச்சரின் அறிவிப்பை ஏற்று வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x