

ரயில் பாதை ஓரமாக பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிப்பது தொடர்பாக இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாததால் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த எஸ்.பி.சுரேந்திரநாத் கார்த்திக் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை பழைய வண்ணா ரப்பேட்டை ரயில் நிலையம் - வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் இடையே பொதுமக்கள் ரயில் பாதை ஓரங்களில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின் றனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 60 லட்சத்துக்கு மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், மாநக ராட்சி சார்பில் 900 கழிவறை கள் மட்டுமே கட்டிக் கொடுக் கப்பட்டுள்ளது. அதில் 500 கழிவ றைகள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளன.
திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால், சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. அதனால் ரயில்பாதை ஓரமாக இயற்கை உபாதைகளை கழிப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு 1-ம் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில் நுட்பத்துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந் தது.
அப்போது, இந்த வழக்கில் முதன்மை எதிர் மனுதாரரான தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லை. இதுவரை பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அடுத்த விசாரணையின்போது பதில் மனுவை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான விசாரணையை நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.