குடிநீர் குடம் ரூ.10, நான்கு கி.மீ. தொலைவில் ரேஷன் கடை: அடிப்படை வசதிகள் இல்லாத ஈச்சநேரி கிராமம்

குடிநீர் குடம் ரூ.10, நான்கு கி.மீ. தொலைவில் ரேஷன் கடை: அடிப்படை வசதிகள் இல்லாத ஈச்சநேரி கிராமம்
Updated on
2 min read

ரேஷன் கடைக்குச் செல்ல 4 கி.மீ. தொலைவு நடக்க வேண்டும். ஒரு குடம் குடிநீருக்கு ரூ.10 செலவு செய்ய வேண்டும் எனப் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் ஈச்சநேரி கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், அவனியா புரத்தில் இருந்து புறவழிச் சாலையை கடந்து கழுவன்குளம் செல்லும் வழியில் உள்ளது ஈச்சநேரி கிராமம். மதுரை மாவட்டத்தை ஒட்டி அமைந்திருந்தாலும் இந்த கிராமம் சிவகங்கை மாவட்டத்துக்குட்பட்ட திருப்புவனம் ஒன்றியம், பொட்டப் பாளையம் ஊராட்சியில் உள்ளது.

மதுரையில் இருந்து கிராமத்தை நோக்கி செல்லும்போது அந்த சாலை குண்டும், குழியுமாகவும், வாகனத்தை ஓட்ட முடியாமல் சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்தும் காணப்படுகிறது. இங்குள்ள கிளாக்குளம் கண்மாயில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.

இங்கு சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். சொந்தமாக விவசாய நிலம் இல்லாததால் இந்த கிராம மக்கள் கால்நடை வளர்ப்பையும், கூலித் தொழிலையுமே பிரதானமாகக் கொண்டுள்ளனர். கிராம மக்கள் கூலி வேலைக்காக மதுரை, அவனியாபுரம் ஆகிய பகுதிகளை நம்பியுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 3 பெட்டிக் கடைகள் உள்ளன. இவற்றை தவிர குடிநீர், மருத்துவம், போக்குவரத்து என வேறு எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தான் இவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க வேண்டுமெனில் சில கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும்.

ஆறு கி.மீ. தொலைவில் அரசு மருத்துவமனை

(சின்னவீரன், மணிகண்டன்)

சின்னவீரன்(61) என்பவர் கூறியது: கூலி வேலையை நம்பியே வாழ்க்கையை நடத்து கிறோம். குழாயில் வரும் குடிநீர் உப்பாக இருப்பதால் அதை குடிக்க முடியாது. இதனால் 2 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும் குடிநீரை குடம் ரூ.10-க்கு வாங்குகிறோம். ரேஷன் பொருட்கள் வாங்க 4 கி.மீ. தொலைவில் உள்ள கழுவன்குளத்துக்குச் செல்ல வேண்டும். இங்கிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ள கொந்தகையில் அரசு மருத்துவமனை உள்ளது. சிகிச்சைக்காக அங்கு தான் செல்ல வேண்டும். ஆனால், எங்கள் ஊரில் இருந்து பேருந்து வசதி இல்லை. இதனால் ஆட்டோவில் தான் மருத்துவமனைக்கு செல்கிறோம். மாதத்துக்கு ஒருமுறை எங்கள் கிராமத்துக்கு மருத்துவர் வருவார் என்றார்.

மணிகண்டன்(28) என்பவர் கூறியது: இங்கேயுள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை உள்ளது. அதற்கு மேல் படிக்க வேண்டுமென்றால் மதுரைக்கு தான் செல்ல வேண்டும். முன்னர் மதுரையில் இருந்து காலை 6 மணிக்கும், மாலை 5 மணிக்கும் பேருந்து இயக்கப்பட்டது. சாலை சேதமடைந்ததால் கடந்த 2 ஆண்டுகளாகப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் 1 கி.மீ. நடந்து சென்று வைக்கம் பெரியார் நகரில் தான் பேருந்து ஏற வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in