Published : 20 Oct 2020 08:21 PM
Last Updated : 20 Oct 2020 08:21 PM

திமுக ஆட்சிக்கு வந்தால் தவறு செய்த அதிமுக அமைச்சர்கள் தண்டிக்கப்படுவார்கள்: ஸ்டாலின் பேச்சு 

சென்னை

ஜெயலலிதா மரணத்தின் மர்மமாக இருந்தாலும், கோடநாடு கொலை, கொள்ளை விவகாரமாக இருந்தாலும், லஞ்ச லாவண்ய வழக்குகளாக இருந்தாலும், அவை திமுக ஆட்சியில் சட்டபூர்வமாக நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தேனி வடக்கு, தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இன்று காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

அப்போது ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம்:

“கரோனா காலம் என்பது மிக மோசமான காலம். யாருக்கு எப்போது எப்படி எதனால் இந்த வைரஸ் வருகிறது, தொற்று எங்கிருந்து ஏற்படுகிறது என்பதை இதுவரை கணிக்க முடியாத காலம். தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்துகள் இல்லை. யாரையும் தொற்றலாம் என்பதுதான் சூழ்நிலை.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கே கரோனா தொற்றிவிட்டது. அவரைவிடப் பாதுகாப்பானவர்கள் யாராவது இருக்க முடியுமா? இத்தகைய சூழ்நிலையிலும் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்கள் ஆற்றிய பணி என்பது திமுக வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது.

‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை நான் அறிவித்தேன். காய்கறிகள் கொடுத்தோம். மளிகைப் பொருள்கள் கொடுத்தோம். மருந்துப் பொருள்கள் கொடுத்தோம். உணவுப் பொருள்களை வழங்கினோம். அடிப்படைத் தேவைகளை வழங்கினோம். நாம் தருவது மட்டுமல்ல, இந்தத் திட்டத்தின் படி யார் என்ன பொருள் வேண்டும் என்று கேட்கிறார்களோ அந்தப் பொருள்களை வாங்கிக் கொடுத்தோம்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் போன்றவர்களுக்கு பல ஊர்களில் நிதி உதவி செய்தோம். வெளிநாடுகளுக்குப் போய் மாட்டிக் கொண்டவர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் செய்தோம். வெளிமாநிலத்தில் இருந்து திரும்ப முடியாதவர்களை திரும்பஅழைத்து வந்தோம். இத்தகைய பணிகள் செய்து வரும்போது இன்னொரு ஏக்கமான குரல் நமக்கு வந்தது.

எங்களுக்கு வீடு வாசல் இல்லை, உணவுப் பொருள்களைக் கொடுத்தால் சமைக்க முடியாது, அதற்கு வழியில்லை, எனவே சமைத்த உணவுகளைத் தாருங்கள் என்றார்கள். அந்த அடிப்படையில் 73 சமையல் கூடங்களை அமைத்தோம். 239 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இணைத்தோம். பல லட்சம் பேரின் பசியைப் போக்கினோம்.

இப்படி எந்த இயக்கமும் செய்யவில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஏதாவது ஒரு மாநிலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியாவது இப்படிச் செய்திருக்குமா என்றால் இதுவரை தகவல் இல்லை.

கரோனா என்பது யாரையும் தொற்றும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் திமுக தொண்டர்கள் பணியாற்றினார்கள். இத்தகைய தியாகத் தொண்டர்களுக்குத் தலைமை தாங்குகிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

இந்தத் தேனி மாவட்ட முப்பெரும் விழா மூலமாக தமிழகம் முழுவதும் இருக்கிற திமுக தொண்டர்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன்! நன்றி தெரிவிக்கிறேன்! உங்கள் தியாகங்கள் வீண் போகாது. உங்கள் உழைப்பு வீண் போகாது. உங்கள் தொண்டு வீண் போகாது. அனைவரது உழைப்பையும் என் உள்ளத்தில் இருத்தி வைத்திருக்கிறேன்.

மறைந்த தலைவர் நம்மை இப்படித்தான் வளர்த்தார், அண்ணா இப்படித்தான் நாம் செயல்பட வேண்டும் என்று விரும்பினார். திமுக இதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. முதல் முறை ஆட்சிக்கு வந்த போது முதல்வர் கருணாநிதி, ''நான் முதலமைச்சராக கோட்டையில் இருந்தாலும், அங்கிருந்தபடியே குடிசைகளைப் பற்றியே சிந்திப்பவன்" என்றார்.

தன்னுடைய ஆட்சிக்கு மூன்று இலக்கணம் இருப்பதாக அவர் சொன்னார்.

1. சமுதாய சீர்திருத்தத் தொண்டு

2. வளர்ச்சிப்பணிகள்

3. சமதர்ம நோக்கு

- இவை மூன்றும்தான் தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக கலைஞர் சொன்னார்.

அந்த அடிப்படையில்தான் ஆட்சி செலுத்தினார்.

இன்றைய ஆட்சிக்கு இப்படி எந்த இலக்கணமும் இல்லை. கலெக்சன், கமிஷன், கரெப்சன் ஆகிய மூன்றும்தான் இவர்களது இலக்கணம். அதனால்தான் அதிமுக ஆட்சியானது எத்துணை அலங்கோல ஆட்சியாக இருக்கிறது என்பதை பேராசிரியர் அருணன் சொன்னார்.

ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் திமுக ஆட்சி. ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அதிமுக ஆட்சி.

அதிமுக ஆட்சியில் தனது சாதனைகளை வரிசைப்படுத்த முடியுமா?

* நீட் தேர்வு கொடுமை காரணமாக 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

* ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமைதி ஊர்வலம் போன தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சி இந்த ஆட்சி.

* சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அடித்தே கொன்ற ஆட்சி இது.

* ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சென்னைக் கடற்கரையில் இருந்து அடித்து விரட்டி, ஆட்டோக்களுக்கு தீ வைத்து கலவரத்தை உருவாக்கிய ஆட்சி இந்த ஆட்சி!

* எட்டு வழிச் சாலைகள் அமைப்பதால் தங்களது நிலங்கள் பறிபோகும் என்ற கோரிக்கையுடன் போராடிய அப்பாவி மக்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்பிய ஆட்சி இந்த ஆட்சி.

* மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்தார்கள் என்று சமூகச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த ஆட்சி இந்த ஆட்சி!

* கோடநாடு பங்களாவில் கொலை செய்து, கொள்ளை அடித்ததில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பெயரே அடிபட்டது.

* பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் படம் எடுத்தவர்களைக் காப்பாற்றிய அரசு இந்த அரசு.

* விவசாயிகள் பெற வேண்டிய கிசான் உதவித்தொகையை போலி விவசாயிகள் பெற வழிவகை ஏற்படுத்திக் கொடுத்த ஆட்சி இது.

*குடிமராமத்து என்ற பெயரால் ஆளும்கட்சியினர் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்த ஆட்சி இது.

* 2017, 2018, 2019 - ஆகிய மூன்று ஆண்டுகளில் அரசு புள்ளிவிவரப்படியே 4800 பேர் டெங்குவால் மரணம் அடையக் காரணமான ஆட்சி இது.

* தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் டெல்லிக்கு அடகு வைத்த ஆட்சி இது.

* நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முறை தீர்மானம் போட்டு அனுப்பிய பிறகும் அதை வைத்து விலக்கு பெற முடியாத ஆட்சி இது!

* விவசாயத்தை வேர் அறுக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்த ஆட்சி இது!

* சிறுபான்மையினர் விரோதக் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த ஆட்சி இது!

* மாநிலத்துக்கு வரவேண்டிய நிதியையும் வாங்க முடியாமல், ஜிஎஸ்டி தொகையையும் பெற முடியாத ஆட்சி இது.

* முதல்வர் மீதான ஊழல் புகார் சிபிஐ வசம் உள்ளது.

* துணை முதல்வர் மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் உள்ளது.

* முதல்வர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மீதான ரூ.89 கோடி ஆர் கே. நகர் தேர்தல் புகார் வருமான வரித்துறையிடமும் தேர்தல் ஆணையத்திடமும் உள்ளது.

* அமைச்சர் வேலுமணி மீதான புகாரை யாரை வைத்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

* அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

* இந்த ஆட்சியில்தான் தலைமைச் செயலகத்திலேயே வருமான வரிச் சோதனை நடத்தியது.

* இந்த ஆட்சியில்தான் டிஜிபியே சிபிஐயால் விசாரிக்கப்பட்டார்.

* முதல்வருக்கு நெருக்கமான செய்யாதுரை வீட்டில் கோடிக்கணக்கில் பணமும், தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன.

* துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் கோடிக்கணக்கில் பணமும் தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன.

* அதிமுக அரசால் போடப்பட்ட பல நூறு கோடி மதிப்பிலான டெண்டர்களை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

* ஆளும்கட்சி எம்எல்ஏவையே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த எம்எல்ஏவே பேசியுள்ளார்.

* பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அவரது துறையில் நடப்பதே தெரியவில்லை.

* நீட் சட்டங்கள் நிராகரிக்கப்பட்டது சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கே தெரியவில்லை.

* பழங்குடி சிறுவனை அழைத்து தனக்கு செருப்பு மாட்டிவிடச் சொல்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

* தன்னை விமர்சித்து எழுதிய பத்திரிகையாளர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார் அமைச்சர் வேலுமணி.

* முதலமைச்சரை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

* பெரியார், அண்ணா சிலைகள் அவமரியாதை செய்யப்படுவது தமிழகத்தில் வழக்கமாக ஆகிவிட்டது.

* பெரியார் சிலைக்கு அருகில் புகைப்படம் எடுத்தற்காக மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

* அண்ணா பெயரால் கட்சி நடத்திக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தையே ஒரே நாளில் சூரப்பாவுக்கு திருட்டுத்தனமாக விற்க திட்டம் போட்டார்கள்.

6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டும் 10 ஆயிரம் பேர் இறந்ததும் இந்த ஆட்சியில் நூற்றாண்டுக் கறைகள்.

- இவை தான் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகள்.

மக்கள் மன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நான் தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகை இதுதான். இவை மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சண்டை போடுவதைப் போன்ற ஒரு நாடகத்தை நடத்தி மக்களை திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். பதவி இருக்கும் வரை இவர்கள் இருவரும் பிரிய மாட்டார்கள். அவர்களுக்குள் சண்டை என்பதெல்லாம் மக்கள் முன்னால் நடத்தப்படும் நாடகங்கள்.

'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்று செய்தி வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

அதற்குப் பதில் சொல்லும் விதமாக வாட்ஸ் அப்பில் வந்த செய்தி என்ன தெரியுமா? 'எது குனிந்ததோ அது நன்றாகவே குனியும். எது குனிகிறதோ அது நன்றாகவே குனிகிறது. எது குனியவிருக்கிறதோ அது நன்றாகவே குனியவிருக்கிறது'. இப்படிச் செய்தி வெளியாகி உள்ளது.

முந்தைய நாள் செய்தி வெளியிட்ட ஓ. பன்னீர்செல்வம் மறுநாள் எடப்பாடி பழனிசாமியிடம் சரண் அடைந்துவிட்டார். அதற்கு என்ன காரணம்? ஆறுமாத காலம் கொள்ளைகள் தொடருவதற்காகத்தான் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக இருப்பதைப் போல நடிக்கிறார்கள். பதவி போனதும் இருவரும் ஆளுக்கொரு திசையில் போய்விடுவார்கள்.

அவர்கள் எந்தத் திசைக்குப் போனாலும், எங்கே தலைமறைவு ஆனாலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மமாக இருந்தாலும், கோடநாடு கொலை, கொள்ளை விவகாரமாக இருந்தாலும், லஞ்ச லாவண்ய வழக்குகளாக இருந்தாலும் - அவை சட்டபூர்வமாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழியாக இந்த தேனி முப்பெரும் விழா கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x