விருதுநகரில் வனப்பகுதியில் சாலை அமைப்பதாக எழுந்த புகார்: அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு

விருதுநகரில் வனப்பகுதியில் சாலை அமைப்பதாக எழுந்த புகார்: அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வனப்பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்பாயம் வழங்கிய உத்தரவின் பேரில் அதிகாரிகள் குழு இன்று நேரில் ஆய்வு நடத்தியது.

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அய்யனார் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளை நிலங்கள் உள்ளன.

குறிப்பாக, அம்மா தோப்பு மூலக்காடு, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 1914-ம் ஆண்டு முதல் மாட்டு வண்டிகள் சென்று வரக்கூடிய அளவுக்கு மண் பாதை இருந்துள்ளது.

தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் நபார்டு வங்கி மூலம் ரூ.4.50 கோடி மதிப்பில் 7 பாலங்கள் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2008ம் ஆண்டு 3 கி.மீட்டர் தூரம் நடந்துள்ளது.

தற்போது மூன்றரை கிலோ மீட்டர் தூரம் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் மற்றும் வனப் பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக வத்திராயிருப்புப் பகுதி சேர்ந்த முருகன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்பேரில் மத்திய சுற்றுச்சூழல் துறை தென் மண்டல மூத்த அதிகாரி கார்த்திகேயன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், வனத்துறை கூடுதல் வனப் பாதுகாவலர் யோகேஷ், மாவட்ட முதன்மை வன அலுவலர் முகமது ஷபாப் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டர்.

மாவட்ட ஆட்சியர் கண்ணன் கூறுகையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்பேரில் ஆய்வு செய்துள்ளோம். இந்த ஆய்வின் அடுத்து இந்த சாலைகள் அமைக்கும் பணிகள் அடுத்து தொடர்வது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பு அறிவிக்கும். நாங்கள் ஆய்வினை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா கூறுகையில், இப்பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக வண்டிப்பாதை இருந்தது. அதை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தோம். தற்போது சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

வனத்துறை அனுமதி பெறவில்லை எனக்கூறி வாய்மொழி உத்தரவாக வேலையை நிறுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in