

மதுரையில் இன்று சின்ன வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரையும், பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.80 வரையும் விற்றது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தட்டுப்பாடு காரணமாக வெங்காயம் விலை உயர்ந்து வருவதால் வியாபாரிகள், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
அன்றாட சமையலில் அதிகம் பயன்படக்கூடியது வெங்காயம். இதில், வீடுகளில் தயார் செய்யப்படும் உணவுகளில் சிறிய வெங்காயம் பயன்பாடு அதிகம் இருக்கும். ஹோட்டல்களில் பெரிய வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதனால், ஆண்டு முழுவதுமே வெங்காயம் தேவை இருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக பெரிய வெங்காயமும், சிறிய வெங்காயமும் போட்டிப்போட்டுக் கொண்டு விலை உயர்ந்து வருகிறது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் வெங்காயம் மிக அதிகளவு தேவைப்படுகிறது. ஆனால், சந்தைகளுக்கு சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சந்தைகளுக்கு வரத்து குறைவாக உள்ளது.
அதனால், மதுரையில் இன்று சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையும், பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.80 வரையும் விற்பனையானது. சந்தைகளில் நடுத்தர, ஏழை மக்கள், வெங்காயம் வாங்க முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், ‘‘மழை தொடரும்பட்சத்தில் இந்த விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்து வழக்கமாக வெங்காயம் அதிகளவு வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது அங்கிருந்தும் வரத்து குறைந்தது.
அதுபோல் திண்டுக்கல் வெங்காய சந்தைக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் வெங்காயமும் குறைந்தது. வெயில் அடிக்கத் தொடங்கினால்
அடுத்த 15 நாட்களில் வெங்காயம் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது. தீபாவளிப் பண்டிகை நேரத்தில் இந்த விலை உயர்வு கவலையளிக்கிறது’’ என்றார்.
மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் செயல்படும் வேளாண் அறிவியல்நிலையத்தின் உதவிப்பேராசிரியர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘‘மழைக்காலம் வந்தாலே வெங்காயம் சீசன் வராது. அறுவடை இருக்காது. வெங்காயம் விலை கூடும். மழைக்காலம், குளிர் காலத்தில் மிக அதிக நாட்கள் வெங்காயத்தை சேமித்து வைக்க முடியாது. சாகுபடி பரப்பும் குறைவாக உள்ளது.
அதனால், வரத்து குறைவதால் விலை உயர்ந்துள்ளது. இதை சரிக்கட்ட வடமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்தால் இந்த விலையை குறைக்கலாம்’’ என்றார்.
இயற்கையாக மழையால் வெங்காயம் விலை உயர்ந்துள்ளதா? அல்லது தீபாவளி பண்டிகையை குறிவைத்து வியாபாரிகள் ஆங்காங்கே வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளார்களா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.