Published : 20 Oct 2020 04:23 PM
Last Updated : 20 Oct 2020 04:23 PM

6,277 போக்குவரத்து ஊழியர்களின் ரூ.1,625 கோடி ஓய்வூதியப் பலன்கள்; ஒன்றரை ஆண்டாக வழங்காமல் இழுத்தடிப்பதா?- தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6,277 பேருக்கு வழங்க வேண்டிய ரூ.1625 கோடி ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் 6 ஆயிரத்து 227 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 25 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தவர்கள்.

இவர்களுடைய சம்பளத்தின் ஒரு பகுதியாக அவர்களுக்கு வழங்குவதற்கு போக்குவரத்துக் கழகங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டப்படியான ஓய்வூதியப் பலன்கள் எதையும் அரசாங்கம் இன்று வரையிலும் அவர்களுக்கு வழங்கவில்லை.

இந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஒட்டுமொத்த தொகை ரூபாய் 1,625 கோடி என்று கணக்குகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொழிலாளர்கள் தங்களுடைய இறுதிக் காலத்தில் வாழ்வதற்காக என்றோ அல்லது வீடு கட்டுவதற்காக அல்லது குழந்தைகளின் படிப்பு, திருமணம் ஆகியவற்றுக்காகத் திட்டமிட்டுச் சேமிக்கப்பட்ட பணம் இது.

இந்தப் பணம் ஓய்வு பெறுகிற நாளில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஓய்வுபெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் அதைப் பற்றி வாய் திறக்காமல் தமிழக அரசு இருக்கிறது. ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இருக்கிறது.

இதனால் இந்த ஓய்வு பெற்ற ஊழியர்களில் பலரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பல குடும்பங்களில் இதனால் திருமணங்கள் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கின்றன. ஆனால் மாநில அரசு இதைப் பற்றி கவலையும் பட்டதாகத் தெரியவில்லை.

எனவே, தமிழக அரசு உடனடியாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரை ஓய்வு பெற்றுள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமான போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களுக்குச் சேர வேண்டிய கிராஜுவிட்டி, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்துப் பலன்களையும் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது''.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x