7 ஆண்டுகளாக புதுச்சேரியில் மக்கள் முன்பு நடத்தப்படாத லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரவிழா

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு 7 ஆண்டுகளாக மக்கள் முன்பு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரவிழா நடத்தப்படவில்லை. அதிகாரிகள் உறுதிமொழி எடுப்பதை மட்டும் கடைப்பிடிப்பதை விடுத்து பழைய முறைப்படி பொதுவில் இந்நிகழ்வை நடத்தக்கோரி மத்திய அரசு தொடங்கி தலைமைச்செயலாளர் வரை மனு தர தொடங்கியுள்ளனர்.

ஆண்டுதோறும் அக்டோர் 27 முதல் நவம்பர் 1-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நாடு முழுவதும் நடத்தப்படுவது வழக்கம். மக்கள் நேரடியாக அரசுத்துறைகளை அணுகி கூட்டத்தில் புகார்களை தெரிவித்து நிவர்த்தி செய்வது வழக்கம்.

ஆனால், புதுச்சேரியில் மக்கள் முன்பாக அனைத்து துறைகளிலும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு 7 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை

தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு வார உறுதி மொழி ஏற்பார்கள். அரசு அலுவலகங்களில் முக்கிய துறைகளில் உறுதிமொழி ஏற்பதுடன் நிகழ்வு நிறைவடைந்து வருகிறது. இம்முறை மக்கள் மத்தியில் லஞ்ச ஒழிப்பு வாரத்தை நடத்தக்கோரி மத்திய அரசு தொடங்கி தலைமைச்செயலாளர் வரை மனு தந்துள்ளனர்.

இதுபற்றி மனு தந்துள்ள புதுச்சேரி மாநில மாணவர், பெற்றோர் நலவாழ்வு சங்கத்தலைவர் பாலா கூறுகையில், "பொதுமக்கள் பங்களிப்புடன் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளது. வெளிப்படை நிர்வாகம், ஊழலற்ற பணி தேவைகளை மக்களுக்கு புதுச்சேரி அரசு துறை நிர்வாகம் அளித்திட இக்கூட்டத்தை நடத்த வேண்டும். கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஊழல்கள் களையப்பட்டு 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் அரசுக்குக் கூடுதல் நிதி வருவாய் கிடைத்தது. நிதி கசிவு தடுக்கப்பட்டது. அரசின் அனைத்து துறைகளிலும் வெளிப்படை தன்மை ஏற்பட்டது. இந்த ஆண்டு இந்நிகழ்வை நடத்த வேண்டும் என்று மனுக்கள் மத்திய அரசு தொடங்கி புதுச்சேரி அரசு வரை தந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து அரசு தரப்புக்கு எடுத்துச் செல்லும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "கூட்டத்தை நடத்தாமல் அரசு புறக்கணித்தால் நிர்வாகத்தில் பல முறைகேடு நடந்துள்ளது என்பது உறுதியாகும். மத்திய ஊழல் தடுப்பு ஆணைய பரிந்துரைப்படி புதுவையில் இக்கூட்டத்தை நடத்துவது அவசியம்" என்று தெரிவித்தனர்.

தற்போது கரோனா காலமாக இருப்பதால் அதை காரணம் காட்டி 8-வது ஆண்டாக நடப்பாண்டும் இக்கூட்டத்தை மக்கள் மத்தியில் நடத்தும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in