

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் குன்னூரில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால குத்துக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான போ.கந்தசாமி கூறுகையில், "சங்க இலக்கியங்களில் குத்துக்கல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்தக் குத்துக்கல் 2,500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த ஒரு இனக்குழுத் தலைவனுக்காக எடுக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவோ அல்லது ஆநிரை கவர்தல் போரில் இறந்துபட்ட வீரனுக்கு எடுக்கப்பட்டதாகவோ இது கருதப்படுகிறது.
அக்காலத்தில் சமூக அந்தஸ்துடன் வாழ்ந்த தலைவன் அல்லது இறந்துபட்ட வீரனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுக் கற்கள் எழுப்பப்பட்டுள்ளது. நெடுங்கல் என்றும் அழைக்கப்படும் இக்குத்துக்கல் 20 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது. பெருங்கற்காலச் சின்னங்களில் குத்துக்கல் ஒரு வகையைச் சார்ந்தது.
இக்குத்துக்கல்லை சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் முனியாண்டி என்ற பெயரில் 40 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். இப்பகுதியில் சில கல்வட்டங்களில் உயரமான கற்பலகைகள் போன்று குத்து கற்களும் நடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் குத்துக்கல் காணப்படுகிறது. அவற்றுள் கொடுமணல், முக்குடி, வேலம்பாளையம், நாட்டுக்கல்பாளையம் ஆகிய ஊர்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
திருமல்வாடி, தேவனூர் போன்ற இடங்களில் கல்வட்டங்களில் உள்ள குத்துக்கற்கள் உட்பகுதியில் அமைந்திருக்கின்றது. இது அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதி வரை ஒரே அமைப்புடன் கூடிய பலகைக் கற்கள் ஆகும்.
இந்தக் கற்களை மேல் பகுதிகள் செதுக்கப்பட்டு சீர் செய்யப்பட்டு முனை கூராக அமைத்துள்ளனர். அதைப்போலவே இங்கு உள்ள குத்து கல்லும் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட குத்துக்கல் இது" என்றார்.