பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகின்றன: உயர் நீதிமன்றம்

பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகின்றன: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

"பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது. லஞ்சம் வாங்கிக் கொடுப்பதில் பத்திரப்பதிவு எழுத்தர்கள் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர்" என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கரூர் மண்மங்கலத்தைச் சேர்ந்த எம்.செந்தில், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் நிலத்தின் சர்வே எண்ணின் உள்ள தவறை சரி செய்ய மண்மங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், "வட்டாட்சியரின் கடிதத்தின் மீது 2 ஆண்டாக நடவடிக்கை எடுக்காத தான்தோனி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அவரது பணிப்பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

வருவாய்த் துறையிலிருந்து தான் லஞ்சம் தொடங்குகிறது. வருவாய்த்துறையில் பணிபுரியும் பெரும்பாலான வட்டாட்சியர்கள், நில அளவையர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள் மற்றும் பலர் ஆவணங்களை திருத்தம் செய்கின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களைக் குவிக்கின்றனர்.

இதுபோன்றே பதிவுத்துறையில் பெரும்பாலான மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள், ஊழியர்கள் செயல்படுகின்றனர். பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகின்றன. லஞ்சம் வாங்கிக் கொடுப்பதில் பத்திரப்பதிவு எழுத்தர்கள் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர்.

லஞ்சம் மற்றும் ஊழலில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுக் கழகங்களில் பணிபுரியும் அதிகாரிகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் வருவாய் மற்றும் பத்திரப்பதிவுத்துறையுடன் சரிசமாக போட்டி போடுகின்றனர்.

இந்த வழக்கில் 2018-ல் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆதார் எண், செல்போன் எண்ணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்"

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் விசாரணை 5.11.2020-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in