ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்க: தீபக், தீபா, வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ்

போயஸ் கார்டன் இல்லம்.
போயஸ் கார்டன் இல்லம்.
Updated on
1 min read

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு ஜெ.தீபக், ஜெ.தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. வேதா இல்ல நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றையும் தமிழக அரசு பிறப்பித்தது.

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து, போயஸ் கார்டன் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் பகுதி வீட்டு உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்திருந்த வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசு நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதில் எந்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு செலுத்தியுள்ளது. ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐந்தாவது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இன்று (அக். 20) விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வருகிற நவம்பர் 5 ஆம் தேதிக்குள் உரிய பதில் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in