Published : 20 Oct 2020 01:10 PM
Last Updated : 20 Oct 2020 01:10 PM

மருங்குளம் கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்: தொடர் மழையால் விவசாயிகள் கவலை

தஞ்சாவூர் அருகே மருங்குளம் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை ஏறத்தாழ நிறைவடைந்துள்ள நிலையில், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் தினமும் நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு பகலாக காத்திருக்கின்றனர். அதேநேரம், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்மணிகள் மழை நீரில் நனைகின்றன.

அவற்றை வெயிலில் உலர்த்தி ஈரப்பதத்தை குறைத்து, மிஷினில் தூசி இல்லாமல் தூற்றி விற்பனை செய்ய காலதாமதம் ஆகிறது. உலர்த்திய நெல்மணிகளை இரவு நேரத்தில் தார்ப்பாயால் மூடி வைத்திருந்தாலும் மீண்டும் நனைந்து, முளைத்துவிடுகின்றன. இதனால் தஞ்சாவூர் அருகே மருங்குளம், கொல்லங்கரை, கா.கோவிலூர், தென்னமநாடு, சேதுராயன்குடிக்காடு உள்ளிட்ட பல கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வாரக்கணக்கில் தேங்கியுள் ளன. விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மானாவாரி பகுதி விவசாயிகள் சங்க செயலாளர் வேங்கராயன்குடிக்காடு து.வைத்தி லிங்கம் கூறியதாவது: எங்கள் பகுதியில் அறுவடை செய்த நெல்மணிகளை, மருங்குளம், கொல்லங்கரை கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக கொட்டிவைத்து, 20 நாட்களாக காத்திருக்கிறோம். நாளொன்றுக்கு 500 மூட்டைக்கும் குறைவாகத்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்த நெல் மூட்டை களை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லாததால், அதிகளவில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. மருங்குளம் கொள்முதல் நிலை யத்தில் மட்டும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன என்றார்.

இதுகுறித்து கொள்முதல் பணி யாளர்கள் கூறும்போது, ‘‘தினமும் மழை பெய்வதால் நனைந்த நெல்மணிகளை வெயிலில் உலர்த்தி 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால்தான் கொள்முதல் செய்கிறோம். இதைவிட கூடுதல் ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்தால், அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு நாங்கள்தான் பொறுப் பேற்க வேண்டியுள்ளது. மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குக்கு எடுத்துச் செல்ல லாரிக்கு (வாடகையை நிர் வாகம் தருகிறது) ரூ.2,500 மாமூல் கேட்கின்றனர். இந்தப் பிரச்சி னைக்கு நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்தால்தான் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் குறையும்” என்றனர்.

தஞ்சை ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் அருகே வண்ணாரப் பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் குவித்துவைத்திருந்த நெல்மணி கள், கடந்த 17-ம் தேதி பெய்த கனமழையில் அடித்துச் செல்லப் பட்டது தொடர்பாக, ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட நாளிதழ்களில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, அந்த கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், நனைந்த நெல்மணிகளை உடனடியாக உலர்த்தி கொள்முதல் செய்ய வும், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கூடுதல் லாரிகள் மூலம் சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும், அதே பகுதியில் கூடுதலாக ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x