விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்; காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானது: கனிமொழி கண்டனம்

கனிமொழி: கோப்புப்படம்
கனிமொழி: கோப்புப்படம்
Updated on
1 min read

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான '800' திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என, அவரது ரசிகர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர். அத்திரைப்படத்திற்கு எதிர்ப்புகளும் வலுத்தன.

இந்நிலையில், தன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் என, முத்தையா முரளிதரன் நேற்று அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அந்த அறிக்கையை ரீட்வீட் செய்திருந்த விஜய் சேதுபதி "நன்றி வணக்கம்" என ட்வீட் செய்திருந்தார். இதன்மூலம் அத்திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதை அவர் உணர்த்தியிருந்தார். பேட்டியிலும் அதை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி தன் மகளுடன் இருக்கும் படத்தைப் பதிவிட்டிருந்த ட்விட்டர் ஐடி ஒன்றில், அவரது மகளுக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டது. பலரும் அந்த ட்வீட்டுக்குக் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்தப் பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. பலரும் அந்நபரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, கனிமொழி இன்று (அக். 20) தன் ட்விட்டர் பக்கத்தில், "விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட.

பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதைச் செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in