

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் தொடங்கும் கவுசிகா நதி, அவிநாசி அருகே நொய்யல் ஆற்றில் கலக்கிறது. தற்போது வறண்டு காணப்படும் கவுசிகா நதியில், அத்திப்பாளையம் பைப் லைன் சாலையில், அரசு உதவிபெறும் பள்ளிக்கு பின்புறம் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. இங்கிருந்து தொடர்ச்சியாக மண் கடத்திச் செல்லப்படுவதாகப் புகார் தெரிவிக்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
இரவு நேரங்களில் ஜெசிபியைக் கொண்டு வந்து, கவுசிகா நதியில் இருந்து மண்ணைத் தோண்டி, டிப்பர் லாரிகளில் நிரப்பி சமூக விரோதிகள் கடத்திச் செல்கின்றனர். அப்பகுதிகளில் குடியிருப்புகள் மிகவும் குறைவாக இருப்பது இவர்களுக்கு வசதியாகஉள்ளது. இங்கு மண் அள்ளக்கூடாது என்று பலமுறை கூறியும், தொடர்ச்சியாக கடத்தலில் ஈடுபட்டு, சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு கொண்டு செல்கின்றனர். நீர் வழிப்பாதையில் தற்போது20 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டு, பெரும் பள்ளமாக காட்சியளிக்கிறது. இந்நிலை நீடித்து ஆழம் அதிகரிக்கப்பட்டால், வட கிழக்குப் பருவமழையின்போது வழிந்தோடும் மழை நீரானது, இந்த பள்ளத்திலேயே தேங்கி விடும். இதனால் நீர்வழிப்பாதை தடுக்கப்பட்டு நீராதாரங்கள் வறண்டுவிடும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதை கவனித்து மண் கடத்தலை தடுத்து நிறுத்துவதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.