

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்ததற்கு, முதல்வர் பழனிசாமிக்கு அம்மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் நன்றி தெரிவித்துள்ளனர்.
அந்தமான் கடல் பகுதியில் கடந்த 10-ம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மெல்ல நகர்ந்து மத்திய வங்கக் கடலின் மேற்குப் பகுதியில் மையம் கொண்டது. பின்னர், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இது 13-ம் தேதி வடக்கு ஆந்திர கடற்கரையோரம், காக்கிநாடாவுக்கு மிக அருகில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரம் முழுவதும் இடைவிடாது அதி கனமழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகரில் சுமார் 1,500 குடியிருப்புகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தீவுகளாக காட்சி அளிக்கின்றன. ஏராளமானோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவிக்கின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 கோடி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று (அக். 19) அறிவித்தார்.
இந்நிலையில், நிவாரண நிதி அறிவித்ததற்காக தமிழக முதல்வருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு, மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், தமிழ்நாடு முதல்வரின் தாயார் தவுசாயம்மாளின் மறைவுக்கு தெலங்கானா மாநில முதல்வர் தனது இரங்கலையும் தமிழ்நாடு முதல்வருக்குத் தெரிவித்துக் கொண்டார்.
அதேபோன்று, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு, மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.