Published : 20 Oct 2020 12:34 PM
Last Updated : 20 Oct 2020 12:34 PM

விவசாய நிலங்களில் உயர் மின் பாதை அமைக்கும் விவகாரம்: முழு இழப்பீட்டை வழங்கிவிட்டு பணிகளை தொடர வலியுறுத்தல்

விளைநிலங்களில் உயர் மின் பாதை அமைப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு இழப்பீட்டை முழுமையாக அளித்துவிட்டு, பவர் கிரிட் நிறுவனம் பணிகளை தொடர வேண்டுமென, தாராபுரம் பகுதி விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு விவசாயிகள் கூறியதாவது:

புகளூர் முதல் திருச்சூர் வரை செல்லும் 320 கிலோ வாட் உயர் மின் பாதை அமைக்கப்படுகிறது. தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியம் சடையபாளையம் ஊராட்சி மானூர்பாளையம், எரகாம்பட்டி ஆகிய இரண்டு கிராமங்கள் வழியாக உயர் மின் பாதை அமைக்க டவர்லைன் அமைக்கும் பணியில் பவர்கிரிட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதனால்விவசாயிகளுக்கும், பவர்கிரிட் நிறுவனத்துக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இருதரப்பும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, தற்போது பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. ஆனால், இதுவரை விவசாயிகளின் நிலங்கள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் மரங்கள் உள்ளிட்டவற்றுக்கு உரிய முறையில் மதிப்பிட்டு எந்த ஒரு இழப்பீடும் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து மதிப்பீடு செய்யாமல் உள்ளனர். வாக்குறுதி அளித்தபடி, பவர்கிரிட் அதிகாரிகள் நடந்துகொள்ளவில்லை. வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தும்போதே,‘போலீஸாரை வைத்து கைது செய்வோம்' என விவசாயிகளை மிரட்டினர். இதுபோன்ற விஷயங்களால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு அதிகம். விவசாயிகள் யாரும் டவர் லைன் பணிகளை தடுக்கவில்லை. மாறாக, இழப்பீட்டை முழுமையாக அளித்துவிட்டு, பணிகளை தொடருங்கள் என்றுதான் வலியுறுத்தி வருகிறோம். விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு முழுமையாக கிடைக்கவில்லை.

பாரபட்சம்

நில மதிப்பீடு எவ்வளவு கிடைக்கும் என்பதெல்லாம் வெளிப்படையாக தெரியவில்லை.

நிலத்துக்கு உச்சபட்ச சந்தை மதிப்பை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். ஆனால், இதில் விவசாயிகள் ஏமாற்றப்படுவதாக தெரிகிறது. விவசாயிகளுக்கு ஒரே அளவீட்டு முறையில் இழப்பீடு வழங்காமல், சிலருக்கு அதிகமாகவும், சிலருக்குகுறைவாகவும் இழப்பீடு வழங்கிபவர்கிரிட் அதிகாரிகள் பாரபட்ச மாக நடந்துகொள்கின்றனர். இதனால், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.

விவசாயிகளிடம் நேரில் பேசிய ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், "இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் பவர்கிரிட் நிறுவனத்திடம் பேசி நல்ல பதிலை பெற்றுத்தருவதாக உறுதிஅளித்தார்". இதையடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x