வரத்து குறைவால் உயரும் விலை: வெங்காயம் 10 நாட்களில் கிலோ ரூ.120-ஐ தொடும்

வரத்து குறைவால் உயரும் விலை: வெங்காயம் 10 நாட்களில் கிலோ ரூ.120-ஐ தொடும்
Updated on
1 min read

பெரிய வெங்காயம் வரத்து குறைந்துவிட்டதால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இன்னும் 10 நாட்களில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120-ஐ தொடும் என்கின்றனர் மொத்த விற்பனையாளர்கள்.

இந்தியாவில், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில்தான் அதிக அளவில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வெங்காயப் பயிர்கள் 75% அளவுக்கு அழிந்துவிட்டன.

இதனால், வெங்காயம் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. திருச்சி வெங்காய மண்டிக்கு தினமும் பெரிய வெங்காயம் 300 டன் அளவுக்கு விற்பனைக்குவரும். தற்போது 200 டன் அளவுக்கே விற்பனைக்கு வருகிறது.

இதனால், அக்டோபர் மாதத் தொடக்கத்தில் மொத்த விலையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது கிலோ ரூ.80 வரை விற்பனையாகிறது. அதேநேரம், சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தகர் சங்கச் செயலாளர் ஏ.தங்கராசு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: திருச்சி வெங்காய மண்டிக்கு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து தினசரி 200 டன் அளவுக்கே பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து தான் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெங்காயம் செல்கிறது.

டிசம்பர் வரை விலை உயர்வு

தற்போது ஏற்றுமதிக்கு தடை உள்ளதால் இதுவரை பெரிய அளவில் விலை ஏறவில்லை. இருப்பினும் இன்னும் 10 நாட்களில் சில்லறை விலையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-ஐஎட்டும். இந்த விலை உயர்வு டிசம்பர் மாதம் வரை இருக்கும். அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் விலை குறைய வாய்ப்புள்ளது.

அரசு இப்போதே திட்டமிட்டு, வெங்காயத்தை கடந்த ஆண்டைப்போல இறக்குமதி செய்தால் விலை உயர்வை ஓரளவு கட்டுப்படுத்தலாம். சின்ன வெங்காயத்தைப் பொறுத்தவரை தற்போது முதல் தரம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்தாலும், 25 நாட்களில் இதன் விலை 50 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in