Published : 20 Oct 2020 07:45 AM
Last Updated : 20 Oct 2020 07:45 AM

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டுவரப்பட்டது சட்டவிரோதம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில் மனு

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது சட்டவிரோதம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மத்திய அரசு சட்டம் பிறப்பித்தது. இதை எதிர்த்து காஞ்சிபுரம், பரமத்தி வேலூர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கிசார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளபதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பணப் பரிவர்த்தனை, வங்கிநடவடிக்கைகளில் ஈடுபடும் கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டே, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ்கூட்டுறவு வங்கிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்த ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது.

430 வங்கி உரிமம் ரத்து

மோசமான நிர்வாகம், நிதிநிலை காரணமாக நாடு முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் 430 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டுறவு சங்கங்களுக்கு ஒவ்வொரு விதமான சட்டங்கள் உள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாக வங்கிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் சட்ட ரீதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர, இதுபோன்ற சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கும் அதிகாரம் உள்ளது. எனவே, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது சட்டவிரோதம் இல்லை என்பதால், இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி அமர்வில்இந்த வழக்கு விசாரணை டிச.4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x