Published : 20 Oct 2020 07:42 AM
Last Updated : 20 Oct 2020 07:42 AM

குடும்பங்களை சீரழித்து உயிர்பலி வாங்கும் இணையதள சூதாட்டத்துக்கு உடனே மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்: சைபர் கிரைம் போலீஸார் பரிந்துரை

சென்னை

இணையதள சூதாட்டங்களில் பணத்தை பறிகொடுத்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர்ப்பலி வாங்கும் இணையதள சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக சைபர் கிரைம் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார்(20), ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் பணத்தை இழந்ததால் கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி கண்ணீர்

புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஆன்லைனில் சீட்டு விளையாடி பலலட்சங்களை இழக்கவே, அவரும் 3 நாட்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.விஜயகுமார் தற்கொலை செய்வதற்கு முன்பாக, வெளியிட்டுள்ள ஆடியோவில், ‘யாரும் இணையதளத்தில் சீட்டு விளையாடாதீர்கள். எனது மரணமே இதில் கடைசியாக இருக்கட்டும்’ என்று ஒரு எச்சரிக்கையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு விஜயகுமாரின் மனைவி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

கம்ப்யூட்டருடன் ஆட்டம்

இணையதள சூதாட்டம் குறித்து சைபர் கிரைம் அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

சீட்டு விளையாடுவதற்கென்றே ஏராளமான இணையதளங்கள் உள்ளன. அவற்றில் விளையாடும்போது, நம்முடன் வேறொரு மனிதர் விளையாடுவதாக நாம் நினைப்பது முதல் தவறு. நம்முடன் ஒரு இயந்திரமே விளையாடும். ஏற்கெனவே நேர்த்தியாக புரோகிராம் செய்யப்பட்ட ஒரு கம்ப்யூட்டருடன்தான் நாம் விளையாடுவோம்.

அடுத்து என்ன சீட்டு வரும், நமது கையில் இருக்கும் சீட்டின் விவரம் உட்பட அனைத்தும் அந்த கம்ப்யூட்டருக்கு தெரியும். பின்னர் எப்படி அதை நாம் ஜெயிக்க முடியும். ஓட்டல்கள், பொது இடங்களில் சீட்டு விளையாடுபவர்களை போலீஸார் கைது செய்கிறார்கள். பணம் கட்டி சீட்டு விளையாடுவது சட்டப்படி தவறு. அப்படி இருக்க, இணையதளத்தில் பணம் கட்டி சீட்டாட்டம் விளையாடுவதை மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது என்பது புரியவில்லை.

எனவே, சீட்டாட்ட இணையதளங்களை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம்அனுப்ப இருக்கிறோம். குடும்பங்களை சீரழித்து உயிர்களை பலி வாங்கும் இணையதள சீட்டாட்டத்தை தயவு செய்து யாரும் விளையாடாதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x