Published : 19 Oct 2020 08:32 PM
Last Updated : 19 Oct 2020 08:32 PM

ஆன்லைனில் பாடம் கற்க வசதியின்றித் தவித்த மாணவி: லேப்டாப் கொடுத்து உதவிய அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை தண்டையார்பேட்டையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க உரிய செல்போன் வசதியின்றித் தவித்த ஆட்டோ ஓட்டுநரின் மகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தனது சொந்தச் செலவில் லேப்டாப் ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் திருமலை. இவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். தினசரி ஆட்டோ ஓட்டினால்தான் வருமானம் என்கிற நிலையில், கரோனா தொற்று ஊரடங்கால் வருமானமின்றி வாழ்க்கையே முடங்கிப்போனது. மிகவும் வறுமையான சூழலில் சின்னஞ் சிறிய வாடகை வீட்டில் நாட்களைத் தள்ளி வரும் இவருக்குத் துன்பத்துக்கு மேல் துன்பமாக மனைவிக்கும் உடல் நலம் இல்லாத நிலை.

இதய நோயால் வாடிய இவரது மனைவி அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவருக்கான மருத்துவச் செலவும் கூடுதல் சுமையாக உள்ளது. இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். தண்டையார்பேட்டை அரசுப் பள்ளியில் நன்றாகப் படித்து வர்கிறார்.

குடும்ப வறுமையை மீறி அவரது அபாரக் கல்வி அறிவுக்கு ஏற்ப செலவழிக்க முடியாத நிலையில், கரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப் படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடப்பதால் மகளுக்கு உரிய வசதி செய்து தரமுடியாத நிலை. ஆன்லைனில் பாடம் கற்பதற்கு மாணவியிடம் செல்போனும் இல்லை, லேப்டாப்பும் இல்லை. வீட்டில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய டிவியில் அரசின் கல்வி நிகழ்ச்சிகளை மட்டும் பார்த்துப் படித்து வந்தார்.

எழுத்துகள் சிறிய வடிவில் இருப்பதாலும் டிவி என்பதால் உடனடியாக அந்தப் பக்கங்கள் மாறுவதாலும் அவரால் தொடர்ந்து படிக்க முடியாமல் சிரமப்பட்டார். ஆன்லைன் வகுப்புக்காக அக்கம்பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்கள், உறவினர்களிடம் செல்போன் கேட்டால் அவர்களும் தரத் தயாராக இல்லாத நிலை.

இதுகுறித்து திருமலை தனது சக ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். கல்வியில் சிறப்பாக இருந்தும் மாணவிக்கு படிப்பதற்கு வறுமை தடையாக உள்ளது குறித்த செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாக வெளியானது.

இந்தச் செய்தியைப் பார்த்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக அந்த மாணவிக்கு உதவ நினைத்தார். உடனடியாக சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு மாணவிக்காக லேப்டாப் தரத் தான் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து இன்று காலை தனது பெற்றோருடன் வந்த மாணவி, அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்தார். அப்போது, 'நீ என்ன படிக்கிறாய்; என்னவாக ஆகப் போகிறாய்?' என்று அமைச்சர் மாணவியிடம் வினவினார்.

வறுமையின் சோகம் உள்ளத்தில் இருந்தாலும் கல்வியின் மீதிருந்த உறுதியால், 'மருத்துவம் பயிலப் போகிறேன்' என மாணவி தெரிவித்தார்.

'வாழ்த்துகள். நன்றாகப் படித்து முன்னேற வேண்டும். வேறு உதவிகள் எதுவானாலும் தயக்கமின்றிக் கேட்கலாம்' என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் விலை உயர்ந்த லேப்டாப் ஒன்றை மாணவிக்குப் பரிசாக அளித்தார். அவருக்கு மாணவியும், பெற்றோரும் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x