

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியில்லாததால் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு ஏற்பட்ட நோய்களை உடனுக்குடன் கண்டறிய முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
கரோனா தொற்று பரவும் இந்தச் சூழலில் அந்த நோயைத் துல்லியமாகக் கண்டறிய சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன்கள் பரிசோதனைகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
அத்துடன் பிற நோய்களின் ஆரம்பக்கட்டத்தைத் துல்லியமாகக் கண்டறியவும் இந்த ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நகர்ப்புறங்களைப் போல் கிராமப்புறங்களில் செயல்படும் அரசு தாலுக்கா தலைமை மருத்துவமனைகளிலும் இந்த வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று 2017-ம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ரூ.56 கோடி செலவில் திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நாகப்பட்டினம் உட்பட 11 அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே எம்ஆர்ஐ ஸ்கேன் நிறுவியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென் மாவட்டங்களில் உசிலம்பட்டி, கோவில்பட்டி, காரைக்குடி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், பெரியகுளம் மற்றும் பத்மநாபபுரம் உள்ளிட்ட 7 அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைக் கருவி இன்னும் நிறுவப்படாமல் உள்ளது.
அதனால், இப்பகுதிகளைச் சுற்றி கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய நோயாளிகள் பெரும் நகரங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளையே பிரதானமாக நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், வீண் அலைச்சல், பொருளாதார இழப்பு என்று கிராமப்புற மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உரிய நேரத்தில் உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளமுடியாமல் போகிறது.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சுகாதார சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறுகையில், ''அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.500 லிருந்து 1000 வரையிலும், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.2,500லிருந்து ரூ.3,500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் கட்டணங்கள் மூலம் மட்டுமே அரசுக்கு 9 ஆண்டுகளில் ரூ.264 கோடி வருமானம் கிடைக்கிறது.
அரசு மருத்துவக் காப்பீட்டு அட்டையைப் பயன்படுத்தி இலவசமாக ஸ்கேன் பார்க்கலாம் என்று சலுகைகள் உள்ளது. இது ஆண்டிற்கும் ரூ.72 ஆயிரம் வரை வருமானம் பெற்றிருப்பவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் காப்பீட்டு அட்டை இல்லாத நடுத்தரக் குடும்பத்தில் வசிக்கும் பொருளாதாரச் சிக்கலில் உள்ள பெரிய குடும்பங்களுக்கு இவ்வளவு பெரிய கட்டணம் செலுத்தி பரிசோதனை மேற்கொள்வது மிகவும் சிரமமாகும்.
அப்படியே கடன் வாங்கி ஸ்கேன் எடுக்கச் சென்றாலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் 10லிருந்து 15 நாட்கள் கழித்து வாருங்கள் என்று தேதி எழுதிக் கொடுத்து அனுப்பிவிடுகின்றனர்.
குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு விபத்துக் காயம், எலும்பு முறிவு, சிக்கலான கர்ப்பிணி தாய்மார்கள், தலைக்காயம், புற்றுநோய், இருதய பாதிப்பு என்று பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு சுமார் 2800 உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முக்கியமான நோய் சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்குப் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
மதுரை உசிலம்பட்டி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 7 அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிகள் நிறுவப்பட வேண்டும்.
அரசு மருத்துவக் காப்பீடு இல்லாத நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரத்திற்கு பின்தங்கிய அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு ஸ்கேன் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணி கூறுகையில், "தாமதம் என்று கூற இயலாது. கடந்த சில மாதங்களாகவே கரோனா தொற்றுநோய்த் தடுப்பிலேயே முழு கவனமும் இருக்கிறது. ஆகையால், சிறு தடங்கல் ஏற்பட்டிருக்கிறதே தவிர தாமதம் ஏற்படவில்லை. ஸ்கேன் கட்டணக் குறைப்பைப் பொறுத்தவரை, அது அரசாங்கத்தின் கொள்கை முடிவு" என்றார்.