Published : 19 Oct 2020 06:57 PM
Last Updated : 19 Oct 2020 06:57 PM

மதுரையில் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் ரூ.30 கோடியில் உருவாக்கப்பட்ட மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம்: தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம்

மதுரை

தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடும் வகையில் மதுரை பாலரெங்காபுரத்தில் உலக தரத்தில் அதிநவீன கேன்சர் சிகிச்சை கருவிகளுடன் ரூ.30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

உலகளவில் மருத்துவத் துறைக்கு தற்போது புற்றுநோய் சவாலாக இருந்து வருகிறது. நாளுக்குநாள் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இணையாக ஹைடெக் புற்றுநோய் சிகிச்சை வசதிகள் இல்லை.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைக்கு தனித்துறை செயல்பட்டாலும் ஹைடெக் நவீன கருவிகள் இல்லாமல் மருத்துவர்கள் தடுமாறி வருகின்றனர்.

இந்நிலையில் ஏழை எளிய மக்களும் புற்றுநோய்க்கு இலவசமாகவும் தரமாகவும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையான நோக்கத்தோடு கடந்த 2012ம் ஆண்டு மதுரையை மையமாக கொண்டு மண்டல புற்று நோய் மையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்காக மதுரை பாலரெங்கபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பமானது. தற்போது இப்பணிகள் நிறைவு பெற்று, கருவிகள் பொருத்தப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளன.

நோயாளிகளுக்கு சோதனை ஓட்டம் முறையில் புற்றுநோய் கட்டிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடக்கிறது. விரைவில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் செல்கள் முற்றிலுமாக அளிப்பதற்கு ரேடியோதெரபி (கதிரியக்க சிகிச்சை) சிகிச்சை நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் வீதம் 30 நாட்கள் வரை எடுக்க வேண்டும்.

தனியாரில் இச்சிகிச்சையை மேற்கொள்ள ரூ.2 லட்சம் ரூ.3 லட்சம் வரை செலவாகும். தற்போது கதிரியக்க சிகிச்சைக்கான லீனியர் ஆக்சலேட்டர், பிரேக்கிங் தெரபி, சிமிலேட்டர் உள்ளிட்ட அதி நவீன சிகிச்சை கருவிகள் இந்த புற்றுநோய் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து கருவிகளும் பொருத்தப்பட்டு முழு அளவில் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த மண்டல புற்றுநோய் மையம், சென்னை, தஞ்சாவூர், கோவைக்கு அடுத்து மதுரையில் அமையவிருக்கின்றது. தென் மாவட்ட மக்களுக்கு இந்த புற்றுநோய் மையம் வரப்பிரசாதமாகும், ’’ என்றார்.

மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ சங்குமணி கூறுகையில், ‘‘இந்த புற்றுநோய் சிகிச்சை மையம் திறக்கப்பட்டதும், ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கதிரியக்க சிகிச்சைப்பிரிவு பாலரெங்காபுரத்தில் உள்ள இந்த மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு மாற்றப்படும். அதன்பிறகு புற்றுநோய் சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடும்வகையில் ஹைடெக் சிகிச்சைகள் இந்த மையத்தில் நடக்கும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x