

இயற்கை வளங்களை கொள்ளை போவதை தடுக்க வந்த என்னை மிரட்டி பணியவைக்க வேடசந்தூர் அதிமுக எம்.எல்.ஏ., முயல்கிறார். அது நடக்காது, என கரூர் எம்.பி., ஜோதிமணி குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை கரட்டுப்பகுதியில் சிப்காட் அமையவுள்ளது எனக் கூறி அங்குள்ள மரங்கள், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து இருதினங்களுக்கு முன்னர் கரூர் மக்களை தொகுதி எம்.பி., ஜோதிமணி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதில் அதிமுகவினருக்கும் ஜோதிமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தார்.
தொடர்ந்து ஜோதிமணி எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிப்காட் அமைப்பதற்கு குஜிலியம்பாறை பகுதியில் தரிசுநிலங்களே இல்லாதது போல் மலைகரடு பகுதியில் 57 ஏக்கரை தேர்வு செய்து, அங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் வேடசந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., பரமசிவம், ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர்.
எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை அவர்கள் மிரட்டுகின்றனர். மக்கள் கோரிக்கையை ஏற்று நேரில் சென்ற என்னையும் எம்.பி., என்றும் பாராமல் ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர். பரமசிவம் எம்.எல்.ஏ., என்னை மிரட்டி பணியவைக்க பார்கிறார். அது நடக்காது.
வேலைவாய்ப்பை அதிகரிக்க சிப்காட் வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கடந்த ஒன்பதரை ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் வராதது. பரமசிவம் எம்.எல்.ஏ., ஆகி நான்கரை ஆண்டுகளில் வராத சிப்காட் தற்போது நான்கரை மாதங்களிலா வரப்போகிறது. இது முழுக்க முழுக்க இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் முயற்சி.
பதவியில் உள்ள மீதமுள்ள மாதங்களில் வேடசந்தூர் தொகுதியில் உள்ள இயற்கைவளங்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் பரமசிவம் எம்.எல்.ஏ., அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர்.
வேலைவாய்ப்பை உருவாக்கும் எண்ணம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோருக்கு இல்லை.
திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமியிடம் புகார் கொடுத்தால், என்கையை மீறி போய்விட்டது என்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் எந்தசெயலும் நடக்ககூடாது. ஆனால் இதையும் மீறி மரங்களை அகற்றும் பணி ஏன் நடைபெறுகிறது என கேள்விகேட்க யாரும் இல்லை.
குரும்பபட்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கில் தனது தொகுதியை சேர்ந்தவர் என்றும் பாராமல் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை.
இதில் எல்லாம் அவருக்கு கவனம் இல்லை. இயற்கை வளங்களை சுரண்டுவதில் தான் பரமசிவம் எம்.எல்.ஏ.,வுக்கு அக்கறை" என்றார்.