Last Updated : 19 Oct, 2020 06:34 PM

 

Published : 19 Oct 2020 06:34 PM
Last Updated : 19 Oct 2020 06:34 PM

மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் ரூ.12.58 லட்சம் முறைகேடு: சேலம் அரசு மருத்துவமனை முன்னாள் டீன் உள்பட 5 பேர் மீது வழக்கு

மருத்துவ உபகரணங்களை வாங்கியதில் ரூ.12.58 லட்சம் மோசடி செய்ததாக சேலம் அரசு மருத்துவமனை முன்னாள் டீன் உள்பட 5 பேர் மீது சேலம் மாவட்ட லஞ்சம், ஊழல் தடுப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் மட்டுமல்லாது, நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்பட 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெறும் முக்கிய மருத்துவமனையாக இருக்கிறது. எனவே மருத்துவமனை விரிவாக்கத்தின்போது, கடந்த 2013-14 ஆம் ஆண்டில், பல்வேறு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

குறிப்பாக, அறுவை சிகிச்சை அரங்கில், நோயாளிகளைப் படுக்க வைக்கும் சர்ஜிகல் பொஸிஷனர் எனப்படும் மேசை, நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கான சாதனம் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில், ரூ. 2.50 லட்சம் மதிப்பு கொண்ட சர்ஜிகல் பொஸிஷனர் மேஜை ரூ.9,50,250 என்ற விலையிலும், ரூ.3.70 லட்சம் மதிப்பு கொண்ட மயக்க மருந்து சாதனம் ரூ.9,21,900-க்கும் வாங்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாகப் புகார்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து, மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் ரூ.12.58 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டதாக, மருத்துவமனையில் பணியாற்றிய 5 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்பட 10 பிரிவுகளின் கீழ் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூறுகையில், ''மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, அப்போது மருத்துவமனையில் பணியாற்றிய டீன் கார்த்திகேயன், நிர்வாக அலுவலர் இளங்கோவன், கொள்முதல் பிரிவுக் கண்காணிப்பாளர் தண்டபாணி, இருக்கைப் பிரிவு உதவியாளர் அசோக்ராஜ், மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்த ஃபார்மா நிறுவன உரிமையாளர் மீனாட்சி ஆகிய 5 பேர் மீது கூட்டுச் சதி, மோசடி உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களில் தண்டபாணி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் தற்போது கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். அவர் மீது ஏற்கெனவே ரூ.40 லட்சம் மோசடி தொடர்பான மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது'' என்றனர்.

முன்னாள் டீன் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது, சேலம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x