

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் உள்ள சந்தனக் கடத்தல் வீரப்பனின் சமாதியில் கூட்டம் கூட விதித்திருந்த தடையை மீறி, அஞ்சலி செலுத்திச் சென்ற வீரப்பனின் மனைவி, மகள்கள் உள்பட 100 பேர் மீது கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக, கர்நாடக வனப்பகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் பதுங்கி, யானைத் தந்தம், சந்தன மரங்களை வெட்டி, கடத்தி அதிரடிப் படை வீரர்களுக்குச் சவாலாக விளங்கி வந்தார். இந்நிலையில், கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே தமிழக அதிரடிப் படையால் சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே உள்ள மூலக்காட்டில் சந்தன கடத்தல் வீரப்பனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 18-ம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நினைவு நாள் அனுசரித்து, அவரது சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மூலக்காட்டில் உள்ள வீரப்பனின் சமாதியில் கூட்டம் கூடப் போலீஸார் தடை விதித்திருந்தனர். மேலும், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை மீறி மூலக்காட்டில் சந்தன கடத்தல் வீரப்பனின் சமாதிக்குப் பலரும் வந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், அஞ்சலி செலுத்திச் சென்றதாக கிராம நிர்வாக அதிகாரி மோகனுக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து மூலக்காடு கிராம நிர்வாக அதிகாரி மோகன், கொளத்தூர் போலீஸில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், கொளத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, தடையை மீறிச் சந்தனக் கடத்தல் வீரப்பன் சமாதியில் கூட்டம் கூட்டியதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவரது மூத்த மகளும், பாஜக இளைஞரணி நிர்வாகியுமான வித்யா ராணி, இளைய மகள் பிரபாவதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், அமைப்பாளர் வெங்கடாசலம், கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் சக்திவேல் உள்பட 100 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.