

நீலகிரி மாவட்டத்தில் மழைப் பொழிவு நாட்கள் குறைந்துள்ள நிலையில் மழை அளவு அதிகரித்துள்ளது. இதனால், விவசாயப் பணிகளிலும், கட்டமைப்புப் பணிகளிலும் கவனம் தேவை என நீர் வள ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொழியும் தென் மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழை, விவசாயம், சுற்றுலா மற்றும் நீர் மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஆகிய முக்கியப் பணிகளுக்கு ஆதாரமாக உள்ளது. ஆனால், காலநிலை மாற்றம் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக நான்கு மாதங்களில் பொழிய வேண்டிய தென்மேற்குப் பருவ மழை 65 அல்லது 75 நாட்களில் பெய்து வருவதாக இந்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''ஜனவரி முதல் மே மாதம் வரை பெய்யக்கூடிய கோடை மழை குறைந்து கொண்டு வருகிறது. தென் மேற்கு மற்றும் வட கிழக்குப் பருவ மழைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு பெய்த தென் மேற்குப் பருவ மழையின் அளவு சராசரி அளவை விட 30% அதிகமாக பெய்துள்ளது.
ஆண்டுக்குச் சராசரியாக தென்மேற்குப் பருவ மழை 661.3 மி.மீ. பெய்யும். ஆனால், இந்தாண்டு 950.8 மி.மீ. அதாவது சராசரி அளவை விட 30% அதிகமாக மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
குறிப்பாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 440 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆண்டுதோறும் பெய்யும் மழையின் சராசரி அளவு 1,324 மி.மீ. ஆனால் தற்போது 1,184.2 மி.மீ., அதாவது 90% மழை பொழிந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள மாறுதலால் அதற்கேற்ப விவசாயப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.